தலிபான்களிடம் சிக்கிய இந்தியர்கள் பாதுகாப்புடன் இருப்பதாக தகவல்
1 min read
Indians trapped by Taliban are reported to be safe
21.8.2021
இந்திய விமானத்தில் ஏறுவதற்காக காபூல் விமான நிலைய வாயிலுக்கு வெளியே காத்திருந்த 150 இந்தியர்களை தலிபான்களால் பிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர்கள் பாதுகாப்புடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியர்களை மீட்க தலிபான்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியர்கள்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைபற்றியுள்ளனர். ஆப்கனில் பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். குறிப்பாக காபூலில் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அங்குள்ள இந்தியா அழைத்து வர தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படையின் சி17 விமானம் நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டது. இந்திய விமானப்படை விமானம் மூலம் காபூலில் இருந்து இன்று காலை 85 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
அடுத்த விமானம் தஜிகிஸ்தானில் இருந்து காபூல் நோக்கி செல்ல தயாராக உள்ளது.
இந்த நேரத்தில் காபூலில் விமான நிலையத்திற்கு வெளியே குழப்பம் நிலவுவதாகவும், அதிகமான இந்தியர்களை விமான நிலையத்திற்குள் அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்தியர்கள் காபூல் விமான நிலையம் வந்ததை அறிந்து கொண்ட தலிபான்கள் விமான நிலையத்தின் வெளிப்பகுதியை சுற்றி வளைத்தனர். விமான நிலையம் அமெரிக்கப்படைகள் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் வெளியில் கூடிய மக்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர்.
கடத்தல்
இந்தியா விமானத்தில் ஏறுவதற்காக வெளியே வந்து சேர்ந்த 150 இந்தியர்களையும் தலிபான்கள் சுற்றி வளைத்துக் கொண்டதாக தகவல் வெளியானது. அவர்களை கடத்திச் சென்று விட்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து காபூல் விமான நிலையத்திற்கு வெளியே திரண்ட இந்தியர்கள் பாதுகாப்புடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களை இந்தியா அழைத்த வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
பேச்சு வார்த்தை
இந்தநிலையில் இந்தியர்களை மீட்க தலிபான்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியர்கள் விடுவிக்கப்பட்டால் உடனடியாக அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.