ஓ.எம்.ஆர். சாலையில் 30-ந் தேதி முதல் சுங்கக்கட்டணம் வசூல் நிறுத்தம்
1 min read
O.M.R. Stop toll collection on the road from the 30th
27.8.2021
சென்னை மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்கப்படுவதை முன்னிட்டு ஓ.எம்.ஆர் சாலையில் வருகிற 30-ந் தேதி முதல் சுங்கக்கட்டணம் வசூல் நிறுத்தப்படும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.
மெட்ரோ ரெயில் பணிகள்
சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்குவதை முன்னிட்டு, பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் ஆகிய நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும். ரூ.350 கோடி நிதியில் சாலை பாதுகாப்பை உறுதி செய்ய திட்டம் கொண்டுவரப்படும். மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.56 கோடியில் மேம்பாலம் கட்டப்படும்.
ராஜீவ்காந்தி சாலை மற்றும் சர்தார் பட்டேல் சாலையை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்படும். ராமாபுரம், முகலிவாக்கம் சந்திப்புகளில் 3.14 கி.மீ நீளத்திற்கு உயர்மட்டச்சாலை அமைக்கப்படும். மவுண்ட் மேடவாக்கம் சாலை மற்றும் உள்வட்ட சாலை சந்திப்பில் கீழ்பாலம் அமைக்கப்படும்.
நீலகிரியில் அரசுப்பணியாளர்களுக்கு ரூ.56.70 கோடியில் புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும். பொதுப்பணித்துறையில் 1,615 காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.