எழுத்தாளர் எஸ்.பால பாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது
1 min read
Writer S. Bala Bharathi receives the Bala Sahitya Puraskar Award
4.9.2021
எழுத்தாளர் எஸ்.பால பாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
விருது
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
இதேபோல் இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கும் (யுவ புரஸ்கார்), சிறுவர்களுக்காக எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கும் (பால சாகித்ய புரஸ்கார்) சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இந்த விருது பெறுபவர்களுக்கு செப்பு பட்டயத்துடன், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்படும்.
பால பாரதி
2020-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டன. எழுத்தாளர் எஸ்.பால பாரதியின் ’மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற நாவலுக்கு சாகித்ய அகாதமியின் ’பால சாகித்ய புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கதை விமர்சனம்
இது குழந்தைகள் கதை என்றாலும் பெரியவர்களும் படித்தறிய வேண்டிய நூல்.
குழந்தைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு “குட் டச்”, “பேட் டச்” என்று வெறுமனே போதிப்பதை விட அதை ஒரு கதை வடிவில் சொல்லி இருக்கும் விதம் அபாரம்.
குழந்தைகளுக்கு, ” தன் உடல் தன் உரிமை” எனும் எண்ணத்தை ஏற்படுத்தும் உயரிய சிந்தனையை கொண்ட அரிய புத்தகம். அக்கருத்தை வெறும் கருத்துச் செறிவுகளாக கடத்திச் செல்லாமல் மாயாஜால தந்திர உத்தி என்னும் அற்புத கலை வடிவிலான புனைவு வாயிலாக தெளிவுபடுத்திய பாங்கு பிரம்மிக்கத்தக்கதாகும்.
சிறுவர்களுக்குள் இயல்பாக நிகழக்கூடிய உரையாடல் வாயிலாகவும், எளிய குடும்பச் சூழலை மையமாகக் கொண்டு இந்த கதை நகரும் வண்ணம் அமைத்துள்ளார்.
குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு அழகிய படச் சித்திரங்கள் வாயிலாக எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த புத்தகமானது அமைந்துள்ளது.
குழந்தைகள் எந்தவித தங்கு தடையுமின்றி இயல்பாகவே வாசிக்க முடியும். அந்த அளவுக்கு எழுத்தில் எளிமை, நயம் உள்ளது.
“மரப்பாச்சி” என்ற பழங்கால விளையாட்டு பொம்மை வாயிலாக கதையை கூறிக்கொண்டே குழந்தைகளின் மீதான வன்முறையை தவிர்க்கும் வழிமுறையை தெளிந்த நீரோடை போல எடுத்துக்காட்டிய விதம் ரசிக்கத்தக்கதாகும்.
குழந்தைகளிடம் யாரேனும் அத்துமீற முயற்சித்தால் மறுப்பை அழுத்தம் திருத்தமாக தெரிவிக்க கற்றுத் தரும் நூலே இது. அத்துமீறுபவர்களைப் பற்றி பெற்றோரிடம் வெளிப்படையாக பேசும் தைரியத்தை குழந்தைகளுக்கு ஊட்டும் புத்தகம்.