14 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் படம் இல்லாமல் சான்றிதழ்
1 min read
Certificate without CM picture after 14 years
6.9.2021
தமிழகத்தில் நல்லாசிரியர்களுக்கு அரசு கவுரவித்து வழங்கும் “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” சான்றிதழில் 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வரின் படம் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தினம்
டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” வழங்கி தமிழக அரசு கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2020-21ம் கல்வியாண்டில் அனைத்து வகையான பள்ளிகளிலும் சிறப்பாக பணிபுரிந்த 379 ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சார்ந்த 10 ஆசிரியர்கள் என மொத்தம் 389 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் விருது பெறும் ஆசிரியர்களுக்கு வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். 2007ம் ஆண்டு முதல் பாராட்டு சான்றிதழில் அப்போது தமிழக முதல்வராக இருப்பவரின் புகைப்படம் இடம் பெறுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு வழங்கப்பட்ட சான்றிதழில் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படம் இடம்பெறவில்லை.
14-வது ஆண்டுகளாக..
14 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வரின் விளம்பரம் இல்லாமல் அரசு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விருதில் அரசின் முத்திரை, முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் படம் ஆகியவை மட்டுமே இடம் பெற்றுள்ளது. முதல்வரின் விளம்பரம் இல்லாமல் சான்றிதழ் வழங்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.