உலக தலைவர்களின் அங்கீகார மதிப்பீட்டில் பிரதமர் மோடி முதலிடம்
1 min read
Prime Minister Modi tops the list of world leaders
6.9.2021
உலக தலைவர்களின் அங்கீகார மதிப்பீட்டில் பிரதமர் மோடி தொடர்ந்து பிரதமர் மோடி முதலிடம் பெற்றுள்ளார்.
அங்கீகார மதிப்பீட்டாளர்
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகளாவிய தலைமைத்துவ அங்கீகார மதிப்பீட்டாளரான ‘மார்னிக் கன்சல்ட்’ நிறுவனம், உலக நாடுகளின் அரசியல் நகர்வுகளை அடிப்படையாக கொண்டு வாராந்திர அடிப்படையில் தலைவர்களை மதிப்பிட்டு வருகிறது.
18 வயதுக்கு மேற்பட்டோரிடம் எடுக்கப்படும் ஆய்வுகள் மூலம் இந்த மதிப்பீடு வெளியிடப்படுகிறது.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய 13 நாடுகளின் தலைவர்களுக்கான அங்கீகார மதிப்பீட்டு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது.
மோடி முதலிடம்
2-ந் தேதி நிலவரத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் 70 சதவீத ஆதரவு பெற்று பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம் பிடித்து உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி அவர் முன்னிலையில் உள்ளார்.
இந்த பட்டியலில் பிற முக்கிய தலைவர்களான ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் (52 சதவீதம்), அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (48 சதவீதம்), ஆஸ்திரேலிய பிரதமர் மாரிசன் (48 சதவீதம்), கனடா பிரதமர் ஜஸ்டின் டிரிடியூ (45 சதவீதம்), இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (41 சதவீதம்) பின்தங்கி உள்ளனர்.
பாரதீய ஜனதா பாராட்டு
கடந்த ஜூன் மாதம் வெளியான இந்த பட்டியலில் பிரதமர் மோடி 66 சதவீத ஆதரவே பெற்றிருந்தார். எனினும் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாத பட்டியலில் அவர் 82 சதவீத ஆதரவுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக தலைவர்களின் அங்கீகார மதிப்பீட்டில் மோடி முதலிடம் பிடித்திருப்பதற்கு பா.ஜனதா பாராட்டு தெரிவித்து உள்ளது.
இது குறித்து கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறுகையில், ‘உலகளாவிய அங்கீகார மதிப்பீட்டில் நாட்டின் உயர் தலைவர் நரேந்திர மோடிக்கு மிக உயர்ந்த இடம் என்பது நாட்டின் பெருமை மற்றும் மதிப்புக்குரிய விஷயம் ஆகும். இது அவரின் மக்கள் நலக்கொள்கைகளுக்கு கிடைத்திருக்கும் மக்களின் ஆசீர்வாதத்தின் விளைவாகும்’ என்று தெரிவித்தார்.
இதைப்போல கட்சியின் செய்தி தொடர்பாளரும், எம்.பி.யுமான அனில் பலூனி தனது டுவிட்டர் தளத்தில், ‘அதிக அங்கீகார மதிப்பீடுகளை கொண்ட உலகளாவிய தலைவர் யாரென்றால், அது 70 சதவீத அங்கீகாரத்துடன் நமது பிரதமர் மோடிஜிதான். வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.