இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது
1 min read
The resolution against the Indian Citizenship Amendment Act was passed in the Assembly
8.9.2021
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய குடியுரிமை சட்ட திருத்தம்
இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால், இது சட்டமாக உடனடியாக நடைமுறைக்கு வந்தது.
இந்த சட்ட திருத்தத்தின் படி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.
மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்திய குடியுரிமை சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்திய நிலையில், தமிழ் நாட்டைச் சேர்ந்த திமுக உள்பட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
சட்டசபையில் தீர்மானம்
இந்நிலையில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், “குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மனமில்லாமல் அதிமுகவினர் வெளியேறினர் என்பதே உண்மை. மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் மதநல்லிணக்கம், மதசார்பின்மை கோட்பாடுகளுக்கு உகந்ததாக இல்லை. இந்திய நாட்டின் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.
இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். சட்டப்படியான சமத்துவம், சட்டப்படியான பாதுகாப்பை மத்திய அரசு மறுக்க முடியாது. நாட்டுக்கு அகதிகளாக வருவோரை மதரீதியாகப் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் சட்டம் உள்ளது. எனவே இந்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த தனிதீர்மானத்தை கொண்டுவந்துள்ளேன்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.