நீட் தேர்வுக்கு பயந்து மாணவன் தற்கொலை: தி.மு.க.-பா.ஜ.க. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு
1 min read
Student commits suicide for fear of NEET exam: DMK-BJP Blame one another
12/9/2021
நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு தி.மு.க.வும் பா.ஜ.க.வும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தனுஷ் தற்கொலை
சேலம் மாவட்டம், மேட்டூர் கூழையூரைச் சேர்ந்த மெஷின் ஆப்பரேட்டர் சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் (வயது 19). ஏற்கெனவே 2019-ல் இருந்து நீட் தேர்வை எழுதி வருகிறார். இதில் பல் மருத்துவத்துக்கு இடம் கிடைத்தபோதும் எம்பிபிஎஸ்தான் படிக்கவேண்டும் என்று உறுதியாக இருந்துள்ளார். இதனால் மீண்டும் தேர்வை எழுத முடிவெடுத்துப் படித்து வந்துள்ளார்.
2 முறை நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காத நிலையில், இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தனுஷ் இருந்துள்ளார். இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் நிலையில் மாணவர் தனுஷ், தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தேர்விற்கு பயந்து இன்று சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
மு.க.ஸ்டாலின் கவலை
இந்த சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாணவர் தற்கொலை செய்தி அறிந்து வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். நீட் தேர்வு கிராமப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீட் தேர்வில் விலக்கு கேட்டு நாளை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மாணவர்கள் விபரீத முடிவு எடுக்க வேண்டாம். மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டமைத்து கொடுக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
மத்திய அரசின் பிடிவாதம் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வளர வேண்டிய மாணவர்களின் தற்கொலைக்கு காரணமாகிறது. நீட் தேர்வு முறைகேடு, ஆள்மாறாட்டம், மாணவர்களின் தற்கொலைகள் மத்திய அரசின் முடிவை மாற்றவில்லை. கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதன் அவசியம் மேலும் வலுவடைகிறது. நீட் தேர்விற்கு எதிரான நமது சட்ட போராட்டம் துவங்குகிறது. அது நீக்கப்படும் வரை சட்டப்போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டுவிட்டர் பதிவில், ”ஆண்டுக்காண்டு தமிழக ஏழை மாணவர்கள் அதிகம் தேர்வு பெறும், உச்ச நீதிமன்றம் பாராட்டும் நீட் தேர்வு. மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளைத் திமுக அரசு நிறுத்தட்டும். அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரைப் பலிவாங்கும் திமுக அரசு சேலம் மாணவர் தனுஷ் மரணத்திற்கு முழுப்பொறுப்பு” என பதிவிட்டுள்ளார்