மறைந்த பிறகும் பாரதிக்கு இடமில்லை அக்ரஹாரத்தில்…
1 min read
Bharati has no place in Agraharam even after death
12-9-2021
பாரதி மறைந்த பிறகும் அக்ரஹாரத்தில் அவருக்கு இடம் இல்லை என்ற கருத்து அவரது 100-வது நினைவு தினத்தில் பேசப்பட்டது.
நூற்றாண்டு நினைவு நாள்
மகாகவி பாரதியாரின் 100-வது நினைவு தினம் பாரதியின் மனைவி செல்லம்மாள் பிறந்த கடையத்தில் நேற்று ( 11-ந் தேதி) சேவாலயா சார்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு டாக்டர் பரமசிவன் தலைமை தாங்கினார். கலங்கல் ஜீவா, நூலகம் சண்முகவேல், செய்தியாளர் சிவராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். திருவள்ளுவர் கழக துணைச் செயலாளார் சோமசுந்தரம், கோபால், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சின்னசாமி, சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்(ஓய்வு) முருகன், எழுத்தாளர் கடையம் பாலன் உள்பட பலர் பாரதியின் பெருமைகளை எடுத்துக்கூறி பேசினார்கள்.
நிகழ்ச்சியில் திருவள்ளுவர் கழகத் தலைவர் தமிழ்த்தென்றல் ஆ.சேதுராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சபுராபீவி பேசும்போது பாரதி கண்ட புதுமை பெண்கள் இப்போது இருந்தாலும் பெண்களுக்கு இன்னும் நமது நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று கூறிய டெல்லியில் பெண் போலீஸ் அதிகாரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை எடுத்துக்காட்டினார்.
பாதியில் சிந்து நதியின் மிசை பாடலை இசைபட இக்பால் பாடினார். பாரதிபால் மிகுந்த பற்று கொண்ட அவர், பாரதி ஒரு சமுதாய சிற்பி என்றார்.
இதனை அடுத்து ஆ.சேதுராமலிங்கம் பேசும்போது சபுராபீவி பேசிய கருத்தை பாராட்டினார். பாரதி பாடலை பாடிய பெரியவர் இக்பாலை வெகுவாக பாராட்டினார். மேலும் பாரதி வலியுறுத்திய கல்வியை எடுத்து கூறினார்.
எழுத்தாளர் பாலன் பேசும்போது கூறியதாவது:&
பாரதி உயிரோடு இருந்தபோது இந்த அக்ரஹாரத்துக்குள் அவரை விடவில்லை. ஆனால் இப்போது அவர் கண்ட கனவு பலித்துவிட்டது. இந்த அக்ரஹாரம் அனைத்து சாதியினரும் வசிக்கும் சமத்துவபுரமாக விளங்குகிறது. ஆனால் இந்த அக்ரஹாரத்தில் பாரதியின் சிலை வைக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. மாறாக அக்ரஹாரத்திற்கு பின்னால் உள்ள நூல் நிலைய வளாகத்தில் வைக்க அனுமதி அளித்துள்ளனர். அவர் இறந்த பிறகும் அவருக்கு இங்கே இடம் இல்லை. ஒரு தியாகி எந்த பலனையும் அனுபவிக்க மாட்டார். அதேபோல் பாரதி கண்ட கனவு நனவானாலும் அவருக்கு இங்கே இடம் இல்லை. பாரதி அக்ரஹாரத்திற்கு பின்னால் நின்று பெருமை கொள்வார்.
அந்த காலத்தில் எட்டயாபுரத்தில் பிறந்த பாரதிக்கு தொலைவில் உள்ள கடையத்தைச் சேர்ந்த செல்லம்மாள் வாழ்க்கை துணை ஆனார். அவரால் பாரதிக்கு பெருமை. அதேபோல் இன்று சென்னை அருகே உள்ள சேவாலாய முரளிதரன் அவர்கள் வெகு தொலைவில் இருந்து வந்து பாரதிக்கு பெருமை சேர்த்து வருகிறார். அந்த முரளிதரனுக்கு சங்கிலி பூதத்தான் துணையாக நின்று இந்த விழாவை நடத்துகிறார்.
இவ்வாறு கடையம் பாலன் பேசினார்.
நிகழ்ச்சியில் சலீம், புகாரி, ஆதம் யஹ்யா, மஜீத், அப்துல்காதர் உள்பட பலர் பேசினார்கள். பாரதியார் தொடர்புடைய பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ&மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமுதாய கல்லூரி பொறுப்பாளர் சங்கிலி பூதத்தான் செய்திருந்தார்.