நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு
1 min read
Announcement of Rural Local Election Date
13.9.2021
‛‛தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகள் என இரு கட்டங்களாக நடைபெறும்,” என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி, மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதனை அடுத்து தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் அக்டோபர் 16-ந் தேதி வரை தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் துவக்கம்: செப்டம்பர் 15
வேட்புமனுத்தாக்கல் முடிவு: செப்டம்பர் 22
வேட்புமனு பரிசீலனை: செப்டம்பர் 23
வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள்: செப்டம்பர் 25
முதல்கட்ட தேர்தல் தேதி: அக்டோபர் 6
இரண்டாம் கட்ட தேர்தல் தேதி: அக்டோபர் 9
ஓட்டு எண்ணிக்கை: அக்டோபர் 12
பேட்டி
இந்த அறிவிப்பை வெளியிட்டப்பின் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்த 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 28 மாவட்டங்களில் நிரப்பப்படாத 789 இடங்களுக்கு அக்டோபர் 9-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். மாவட்ட ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் அக்டோபர் 22-ந் தேதி தேர்வு செய்யப்படுவர்.
பணியாளர் பற்றாக்குறை, நிர்வாக காரணங்களால் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. 9 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். இந்த தேர்தலுக்காக சுமார் 41,500 ஓட்டுப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணியில் 40 ஆயிரம் காவலர்கள், தேர்தல் பணியில் 1.10 லட்சம் அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். நகராட்சி, மாநகராட்சிக்கான தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தொடங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.