திருப்பதியில் அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசனம் தொடங்கியது
1 min read
Free darshan started for all devotees in Tirupati
20.9.2021
திருப்பதியில் நேற்று முதல் அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசனம் தொடங்கியது.
இலவச தரிசனம்
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச தரிசன டோக்கன்களை அனைத்து பக்தர்களுக்கும் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏழுமலையானை இலவசமாக தரிசிக்கும் நடைமுறை கடந்த சில மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், கடந்த 8-ஆம் தேதி பரிசோதனை அடிப்படையில் இலவச தரிசன டோக்கன்களை சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்களுக்கு மட்டும் தினமும் 2,000 எண்ணிக்கையில் விநியோகிக்கப்பட்டு வந்தது. தங்களுக்கும் இலவச தரிசன டோக்கன் தேவை என்று மற்ற மாநிலங்களில் உள்ள பக்தர்களும் தேவஸ்தானத்திடம் கோரி வந்தனர்.
தொடங்கியது
இதையடுத்து இன்று காலை முதல் இலவச தரிசன டோக்கன்களின் எண்ணிக்கை 2,000-த்தில் இருந்து 8,000-ஆக உயர்த்தப்பட்டு அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்பஎட்டு வருகிறது. இலவச தரிசன டோக்கன்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படுவதால் டோக்கன் வாங்குவதற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் ஆகியவை கட்டாயம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் தங்களது ஆதார் கார்டுகளை காண்பித்து இலவச தரிசன டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
நவராத்திரி பிரமோற்சவம்
அக்டோபர் 7 ஆம் தேதி திருமலையில் தொடங்க உள்ள நவராத்திரி பிரம்மோற்சவம், பக்தர்களின் பங்களிப்பின்றி நடத்தப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானங்களின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாரியத் தலைவர் ஒய் வி சுப்பா ரெட்டி கூறும் போது கடந்த ஆண்டு திருவிழாவைப் போலவே, இந்த ஆண்டும் நவராத்திரி பிரம்மோற்சவம் பக்தர்கள் இன்றி ஊழியர்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கோவிலுக்குள் கொண்டாடப்படும் என கூறினார்.