சிவாஜி கணேசனுக்கு சிறப்பு செய்த கூகுள்
1 min readGoogle made special for Shivaji Ganesan
1.10.2021
நடிகர் சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளான இன்று (அக்.,01) அவரை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது.
சிவாஜி கணேசன்
நடிகர் சிவாஜி கணேசன், திரைப்படம் நடிக்க தொடங்கும் முன், மேடை நாடகங்களில் நடித்து வந்தார். ‛சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை பாராட்டிய ஈ.வெ.ரா., அவரை ‛சிவாஜி’ கணேசன் என அழைத்தார். பிறகு அதுவே அவரது பெயராக நிலைத்தது. 1952ல் வெளிவந்த ‛பராசக்தி’ படம் மூலம் திரையுலகுக்குள் நுழைந்த அவர் 300க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள், 9 தெலுங்கு படம், இரண்டு ஹிந்தி படம், ஒரு மலையாள படத்திலும் நடித்துள்ளார்.
செவாலியர் பட்டம் பெற்ற முதல் இந்தியரான சிவாஜி கணேசன், கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, தாதா சாகெப் பால்கே விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். இவருடைய பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இன்று சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளான இன்று, அவரை கவுரவிக்கும் வகையில், உலகளவில் தேடுபொறியில் முன்னணி நிறுவனமாக திகழும் கூகுள், தனது இணையப்பக்கத்தில் சிவாஜி கணேசனுக்கு டூடுல் வெளியிட்டுள்ளது. நுபுர் ராஜேஷ் சோக்சி என்பவர் வடிவமைத்த இந்த டூடுலை திரையுலகினர் மட்டுமின்றி சினிமா ரசிகர்களும் வரவேற்றுள்ளனர்.