May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்; மு.க.ஸ்டாலின் உறுதி

1 min read

All of the promises will be fulfilled gradually; MK Stalin’s commitment

2/10/2021
வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கிராம சபைக் கூட்டம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் இன்று கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அவர் அங்கு திரண்டிருந்த கிராம மக்களுடன் கலந்துரையாடினார். பொதுமக்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அவர் பேசியதாவது:-

கிராம ராஜ்ஜியம்

இந்த கூட்டத்தின் தலைப்பு கிராமசபை. கிராமசபை கூட்டங்களை ஆண்டுக்கு 2, 3 தடவை நடத்த வேண்டும் என்ற மரபை வைத்து பின்பற்றி வருகிறோம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கிராமசபை கூட்டங்கள் முறைப்படி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இன்று காந்தி ஜெயந்தி தினத்தன்று மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் உங்களோடு நான் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நாட்டையே கிராம ராஜ்ஜியமாக மாற்ற விரும்பினார் மகாத்மா காந்தி. உண்மையான இந்தியா கிராமங்களில் இருந்து உருவாகிறது என்று சொன்னவர் காந்தி அவர்கள். அத்தகைய கிராமங்கள் நிறைந்த மதுரை மண்ணை மறக்க முடியாது.

தென்அப்பிரிக்காவில் கோட் சூட் அணிந்து வழக்கறிஞராக பணியாற்றிய மகாத்மா காந்தி அவர்கள் மதுரை மண்ணில் கால் பதித்த பின்னர் அரை ஆடை அணிந்த அண்ணலாக மாறினார்.

மதுரை பகுதியின் கிராமங்கள் வழியாக காந்தி அவர்கள் பயணம் செய்தபோது கிராம மக்களை வயலில் வேலை செய்து கொண்டிருந்த அழுக்கான உடை அணிந்த மக்களை சந்தித்து பேசினார். அப்போது எதற்காக அழுக்கான துணியுடன் வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.

அப்போது கிராம மக்கள் காந்தியை பார்த்து, அய்யா ஒரு வேட்டிதான் இருக்கிறது. அதை துவைப்பதற்கு சோப்பு வாங்குவதற்குகூட காசு இல்லை. மாற்று துணி இல்லாததால் அழுக்கான ஆடையை அணிந்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

கிராம மக்களின் இந்த கருத்துதான் காந்தியின் மனதை மாற்றியது. நாட்டில் ஏழைகள் மாற்று துணிக்குகூட வழியில்லாமல் இருக்கும்போது நமக்கு எதற்கு ஆடம்பர உடை எதற்கு என்று நினைத்தார். உடனே தனது கோட் சூட்டை கழற்றி விட்டு அரை ஆடைக்கு மாறினார். காந்தியை அரை ஆடைக்கு மாற்றி பெருமைப் படைத்தது மதுரை மண்.

உங்கள் ஆட்சி

எனவே கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று கிராம மக்களுடன் கலந்துரையாடுவதில் பெருமை அடைகிறேன். ஆட்சிக்கு வந்தவுடன் சொன்னேன். இது உங்கள் ஆட்சி, உங்களால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி, உங்களுக்கான ஆட்சி. கடந்த 4 மாத தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் இந்த கிராமசபை கூட்டங்கள் நடந்து வருகிறது. நான் முதல்வர் என்ற முறையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அதில் கிடைக்காத மகிழ்ச்சி இந்த கிராமசபை கூட்டத்தில் கிடைத்துள்ளது. இது மறக்க முடியாத நிகழ்வாகும்.

கடந்த 2006-ம் ஆண்டு பாப்பாபட்டி கிராம பஞ்சாயத்து தேர்தல் நடத்த முடியாத சூழல் இருந்தது. அந்த வரலாற்று நிகழ்வை இங்கே பேசிய நீங்கள் சுட்டி காட்டினீர்கள்.

பாப்பாபட்டி, கீரிப்பட்டி

பாப்பாபட்டி மட்டுல்ல கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், விருதுநகர் மாவட்டம் கொட்டகெச்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துக்களில் தேர்தல் நடத்த முடியாத நிலை இருந்தது.

ஜனநாயகத்தை முறைப்படுத்த தேர்தல் நடத்தியே ஆக வேண்டும் என்பதில் எப்போதுமே உறுதியாக இருப்பவர்கள் நாங்கள்.

2006-ம் ஆண்டு முதல்வராக கலைஞர் இருந்தார். நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தேன்.

எப்படியாவது உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நினைத்தோம். அதற்கு யாரையெல்லாம் சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டு சந்தித்து பேசினோம். நீங்களும் ஒத்துழைத்தீர்கள். அதன் பிறகு தேர்தல் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அன்றைய முதல்வர் கலைஞர் பாப்பாபட்டியில் வெற்றி பெற்றவர்களை சென்னைக்கு அழைத்து வரும்படி எங்களுக்கு உத்தரவிட்டார். நாங்கள் வெற்றி பெற்றவர்களுடன் சென்னைக்கு சென்றோம்.

அவர்களை பாராட்டிய முதல்வர் கலைஞர் அவரது தலைமையில் ‘சமத்துவ பெருவிழா’ என்ற பெயரில் விழாவை நடத்தி வெற்றி பெற்றவர்களை கவுரவித்தார்.

அந்த விழாவில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், சமத்துவ திருவிழா கண்ட கலைஞர் என பட்டம் கொடுத்து பாராட்டினார்.

அதோடு நாங்கள் நிற்கவில்லை. இந்த ஊராட்சியின் வளர்ச்சிக்கு அன்றைய அரசின் சார்பில் ரூ.80 லட்சம் ஒதுக்கப்பட்டது. தி.மு.க. சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. அதை வைத்து ஊராட்சியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ் நாட்டில் எத்தனையோ ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுகின்ற போதிலும் நான் இங்கு வந்ததற்கு காரணம் இது தான்.

சமத்துவம் தான் வளர்ச்சிக்கு அடிப்படை. கிராமங்களில் இருந்து தான் ஜனநாயகம் வளர்ந்தது.

பண்டைய காலங்களில் ஊராட்சியில் போட்டியிடுபவர்களின் பெயர்கள் ஒரு குடத்தில் போடப்படும். அதனை குலுக்கி குடத்திற்குள் கையை விட்டு பெயர் சீட்டை எடுப்பார்கள். அதற்கு குடவோலை முறை என பெயர். அது தான் இன்று ஓட்டு சீட்டு முறையாக மாறியுள்ளது.

கிராம ராஜ்ஜியம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம், அதை செய்வோம் என துண்டு சீட்டில் அறிவிக்கவில்லை.

நாங்கள் கூறிய 505 வாக்குறுதிகளில் 4 மாதத்தில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். இதில் நாங்கள் சொன்னதும் உள்ளது. சொல்லாததும் உள்ளது.

வாக்குறுதிகள்

அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் கடமை எங்களுக்கு உள்ளது. அதனை படிப்படியாக நிறைவேற்றுவோம். இது சாமானிய மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி, சாமானியர்கள் ஆட்சி.

இந்தியாவிலேயே உழவர்களின் கருத்துக்களை கேட்டு வேளாண்மைத் துறைக்கு என தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தது தி.மு.க. தான். இது எனது அரசு அல்ல, நமது அரசு. உங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் அரசு.

ஏழை-பணக்காரன், கிராமம்-நகரம், வட-தென் மாவட்டம் என்றெல்லாம் பார்க்காமல் ஒட்டுமொத்தமாக ஒளிமயமான தமிழகம் அமைய பாடுபட்டு வருகிறோம்.

இங்கு பேசிய பலரும் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அந்தப் பகுதிகள் பயன்பெறும் வகையில் ஊராட்சி மன்ற கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம் அமைத்தல் உள்ளிட்ட சில திட்டங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

கேள்வி பதில்

கிராம மக்களுடன் கலந்துரையாடிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.

அதன் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வரும் வழியில் கே.நாட்டார்பட்டி வேளாண் கூட்டுறவு வங்கிக்கு சென்று கூட்டுறவுத்துறை சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்று, அங்கு 20 பயனாளிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் பால் மாட்டு கடன் உதவிகள் வழங்கினார்.

பின்னர் மதுரை வந்த மு.க.ஸ்டாலின் மேலமாசி வீதியில் உள்ள மகாத்மா காந்தி மேலாடையை துறந்த இடத்துக்கு சென்றார். அங்கு காந்தி ஜெயந்தி தினமான இன்று காந்தியடிகள் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். மேலும் கதர் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.

விமானம் மூலம் மதுரை வந்த மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் வந்தார்.

விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் பி.மூர்த்தி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, ராஜகண்ணப்பன், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் மற்றும் அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.