July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

மகாளய அமாவாசை: ராமேசுவரம் கோவிலுக்கு அனுமதி மறுப்பு

1 min read

Mahalaya New Moon: Denial of permission for Rameswaram temple

4.10. 2021

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (புதன்கிழமை) சாமி தரிசனம் செய்யவும், புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மகாளய அமாவாசை

மகாளய அமாவாசை நாளன்று புண்ணிய தலமான ராமேசுவரம் உள்பட கடலோரப் பகுதியில் அமைந்துள்ள கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும், குடும்ப நலனுக்காக சிறப்பு பூஜைகள் செய்தும் கோவில்களில் சுவாமி தரிசனம்-வழிபாடுகளில் கலந்து கொள்வதை பக்தர்கள் ஐதீகமாக கருதுவார்கள்.

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

நாளை மறுநாள் (6-ந் தேதி) மகாளய அமாவாசைவருகிறது. இந்த நாட்களில் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள புண்ணிய தலங்களில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்-பூஜைகள் செய்து அன்னதானம் வழங்குவது குடும்ப நலனுக்கு நல்லது என கருதி இந்த வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.

தடை

அமாவாசை நாளன்று பக்தர்கள் அதிகமாக கூடுவார்கள் என்பதால் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக அமாவாசை நாளுக்கு முந்தைய நாளும், அமாவாசை நாளும் ஆகிய 2 நாட்களுக்கு தமிழக பகுதிகளில் உள்ள கோவில்களில் பக்தர்கள் புனித நீராடவும், சுவாமி தரிசனம் செய்வதற்கும் தமிழக அரசு தடை விதித்தது.

இதனால் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கத்தில் ஒரு ஜோதி லிங்கம் அமைத்துள்ள சிவதலமான ராமேசுவரத்தில் காசிக்கு நிகராக கருதப்படும் புனித நீரான அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் நீராடி சிறப்பு பூஜை செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு அனுமதி இல்லை. இதனால் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த வாரத்தில் கோவில்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ராமேசுவரம் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.

இன்று (திங்கட்கிழமை) ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

நாளை (செவ்வாய்க் கிழமை) மற்றும் நாளை மறுநாள் (புதன்கிழமை) சாமி தரிசனம் செய்யவும், புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வியாழக்கிழமை மட்டும் கோவில் திறந்து இருக்கும். மீண்டும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.

இதனால் இந்த வாரம் 7 நாட்களில் 2 நாள் மட்டுமே சாமி தரிசனம் செய்யும் சூழ்நிலை உள்ளது. மற்ற 5 நாட்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லாததால் பக்தர்கள் விடுமுறை நாட்கள் இருந்தும், குடும்ப நலனுக்காகவும் மற்றும் முன்னோர்களுக்காகவும் சிறப்பு பூஜை செய்ய முடியாமலும் சுவாமி தரிசனம் செய்ய முடியாமலும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.