புற்றுநோயால் அவதிப்பட் சிறுவன் விஷ ஊசி போட்டு கொலை; தந்தை உள்பட 3 பேர் கைது
1 min read
Cancer-stricken boy killed by poison injection; 3 people including father were arrested
6/10/2021
விஷ ஊசி போட்டு சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
லாரி டிரைவர்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் கச்சுபள்ளி கிராமம் குடைக்காரன்வளவு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் பெரியசாமி (வயது 44). இவருடைய மனைவி சசிகலா. இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகனும், 11 வயதில் வண்ணத்தமிழ் என்ற மகனும் இருந்தனர். வண்ணத்தமிழ் அங்கு உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். அவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தான். அவனுக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை.
மகன் கொலை
இதற்கிடையே வண்ணத்தமிழ் இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது. அவனது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இதனை அறிந்த கொங்கணாபுரம் போலீசார், சந்தேகத்தில் பெரியசாமியை பிடித்து விசாரித்ததில் வண்ணத்தமிழ், புற்றுநோயால் நாளுக்கு நாள் உடல் மெலிந்து வந்ததுடன், தினமும் வலியால் துடித்துள்ளான். தினம் தினம் மகன் படும் வேதனையை பெரியசாமியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் மகனை கொலை செய்து விடுவது என்ற விபரீத முடிவுக்கு அவர் வந்துள்ளார். அதற்காக தனியார் ஆஸ்பத்திரி லேப் உதவியாளர் ஒருவரை அணுகி உள்ளார்.
அந்த நபர், பெரியசாமி வீட்டுக்கு வந்து வண்ணத்தமிழுக்கு விஷ ஊசி போட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் வண்ணத்தமிழ் பரிதாபமாக இறந்து விட்டான் என்பது விசாரணையில் தெரியவந்தது.
3 பேர் கைது
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையுண்ட வண்ணத்தமிழின் தந்தை பெரியசாமி மற்றும் விஷ ஊசி போட்ட லேப் உதவியாளர் பிரபு, விஷ ஊசி மருந்து வழங்கிய மருந்து கடை உரிமையாளர் வெங்கடேசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் 3 பேரையும் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.