வாக்குறுதி அளிக்காத பெருந்தலைவரின் பெருந்தன்மை
1 min readThe generosity of a great leader who does not make promises By Kadayam Balan
2.10.2021
(இன்று பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினம். அவரை நினைத்து பெருமை கொள்ளும் நினைவுகளில் இதுவும் ஒன்று…)
சுதந்திர போராட்ட தியாகி என்பதற்கு எடுத்துக்காட்டான முதல் மனிதர் வ.உ.சிதம்பரனார்தான். அதேபோல் அரசியலில் ஒழுக்க சீலர் என்றால் அது பெருந்தலைவர் காமராஜர்தான்.
ஏழைகளும் கல்வி அறிவு பெற பள்ளிக்கூடங்களை திறந்தார். அவர்கள் படித்துவிட்டு வேலைக்குச் செல்ல தொழிற்சாலைகளை அமைத்தார். அவர் அரசியலில் ஒரு சிறந்த பண்பாளர்.
தற்போது தேர்தல் என்றால் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கின்றன. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா என்பதை அக்கட்சிகள் சிந்தித்துப் பார்ப்பது இல்லை. அந்த வாக்குறுதிகள் நாட்டு முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமையுமா என்பதையும் கருத்தில் கொள்வது இல்லை.
தற்போது 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் பஞ்சாயத்து தலைவர் மட்டுமின்றி சாதாரண வார்டு உறுப்பினர்கள் கூட எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்து ஓட்டு கேட்கிறார்கள்.
ஆனால் பெருந்தலைவர் காமராஜர் வாக்குறுதிகளை வாய்க்கு வந்தபடி சொல்லிவிட மாட்டார். “சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்” என்ற பழமொழியை கூறி, நிறைவேற்றக்கூடியதை மட்டும் திடமாக கூறி செயல்படுத்துவார்.
1954 ம் ஆண்டு குலக்கல்வி திட்டத்தால் ராஜாஜி முதல்&அமைச்சர் பதிவியை விட்டு விலகுகிறார். புதிய முதல் அமைச்சராக காமராஜர் தேர்ந்து எடுக்கப்படுகிறார். அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாததால் ஆறு மாதத்திற்குள் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவோ அல்லது எம்.எல்.சி. என்ற மேல்சபை உறுபினராகவோ தேர்வு செய்யப்பட வேண்டும். (அப்போது தமிழ்நாட்டில் மேல் சபை இருந்தது.)
காமராஜரை மேல்சபை உறுப்பினராகும்படி கட்சியினர் வற்புறுத்தினார்கள். ஆனால் அவரோ மக்கள் ஓட்டளித்து சட்டமன்றத்துக்குள் செல்ல விரும்புவதாக கூறிவிட்டார்.
இதனால் காமராஜர் போட்டியிடுவதற்கு ஏதுவாக குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.ஜே.அருணாசலம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் காமராஜர் வேட்பு மனுதாக்கல் செய்தார். அவரை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
அந்த தொகுதியில் கவுண்டிய மகாநதியின் குறுக்கே பாலம் இல்லாமல் மக்கள் அவதிபட்டனர். தேர்தல் பிரசாரத்தின் போது அந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவேன் என்று வாக்குறுதி அளித்து பேசும்படி காமராஜரிடம் காங்கிரசார் கூறினார்கள். அப்படி பேசினால் அதிக அளவில் ஓட்டு விழும் என்றும் அவர்கள் சொன்னார்கள்.
ஆனால் காமராஜரோ அப்படி வாக்குறுதி அளிக்க மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
நான் முதல் அமைச்சர். எப்படியும் என்னால் இந்த பாலத்தை கட்டி கொடுக்க முடியும். ஆனால் என்னை எதிர்த்துப் போட்டியிடுபவரால் இதுபோன்ற வாக்குறுதியை எப்படி கொடுக்க முடியும்? எனவே இதுபோன்ற வாக்குறுதியைச் சொல்லி நான் ஓட்டு கேட்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அந்த வாக்குறுதியை சொல்லாமலேயே அந்தத் தேர்தலில் வெற்றிபெற்றார். அவர் வாக்குறுதி கொடுக்கவில்லை என்றாலும் அந்த இடத்தில் பாலம் கட்டினார். இப்போதும் அந்தப் பாலம் காமராஜரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
நாம் இங்கே சொல்ல வருவது என்னவென்றால் நிறைவேற்ற முடியும் என்று தெள்ளத்தெளிவாக தெரிந்த வாக்குறுதியைக்கூட காமராஜர் சொல்லாமல் ஜனநாயக மரபை காத்தார். ஆனால் இன்று நடப்பதை பார்த்தால் ஜனநாயகம் காற்றில் பறக்கிறது.
-கடையம் பாலன்.