காஷ்மீரில் பொதுமக்கள் படுகொலைக்கு தொடர்புடைய பயங்கரவாதி சுட்டு கொலை
1 min read
Terrorist shot dead in connection with civilian massacre in Kashmir
11.10.2021
ஜம்மு-காஷ்மீரில் சமீபத்திய பொதுமக்கள் படுகொலையுடன் தொடர்புடைய பயங்கரவாதியை படையினர் என்கவுண்ட்டரில் சுட்டு கொன்றனர்.
ஆசிரியர்கள் கொலை
காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளியொன்றில் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் பள்ளியின் பெண் முதல்வர் மற்றும் ஆசிரியர் ஒருவர் என 2 பேரை கொடூர கொலை செய்தனர்.
இதேபோன்று, கடந்த செவ்வாய்க் கிழமை 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 48 மணிநேரத்திற்குள் பள்ளி மீது தாக்குதல் நடந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் பயங்கரவாத தாக்குதல்களில் 7 பேர் வரை படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதனால், உள்துறை அமைச்சக அளவில் ஆலோசனை நடத்தப்பட்டது.
சுட்டுக்கொலை
இந்த நிலையில், காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் ஷாகுந்த் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில், தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதி ஒருவரை படையினர் சுட்டு கொன்றனர்.
அந்த பயங்கரவாதி இம்தியாஸ் அகமது தார் என அடையாளம் காணப்பட்டு உள்ளார் என காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. விஜய் குமார் தெரிவித்து உள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமீபத்திய பொதுமக்கள் படுகொலையுடன் தொடர்புடைய பயங்கரவாதி இம்தியாஸ் என தெரிய வந்துள்ளது.
தேடுதல் வேட்டை
மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 400-க்கு மேற்பட்டோரை விசாரணைக்காக பிடித்துச் சென்றுள்ளனர். இவர்களில், முன்னாள் பயங்கரவாதிகள், அவர்களுக்காக வேலை செய்தவர்கள், கல்வீச்சில் சம்பந்தப்பட்டவர்கள், பிரிவினைவாதிகளுடன் தொடர்புடையவர்கள் ஆகியோரும் அடங்குவர். ஸ்ரீநகர் மாவட்டத்தில் மட்டும் 70 பேர் பிடிபட்டுள்ளனர்.
பிடிபட்ட 400-க்கு மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீபத்திய கொலைகள் குறித்து துப்பு துலக்கும் நோக்கத்தில் விசாரணை நடந்து வருகிறது. கொலைகளை செய்தது யார்? நோக்கம் என்ன? என்பதை அறிய முயன்று வருகிறார்கள்.