பரமக்குடி அருகே இளம்பெண் ஆணவக் கொலை
1 min read
Arson of a girl near Paramakud
17.10.2021
பரமக்குடி அருகே இளம்பெண் ஆணவக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண்ணின் உடலை எரித்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
திருமணம்
பரமக்குடி அருகேயுள்ள நண்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் தென்னரசு – அமிர்தவள்ளி. இவர்களது மகள் கவுசல்யா(வயது23). இவர், மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த செவ்வூர் கனகராஜ் என்பவரை காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கணவன்,மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கவுசல்யா, நண்டுப்பட்டி கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வந்து இருந்ததாகவும்,தனது கணவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை என மன உளைச்சல் அடைந்த கவுசல்யா கடந்த 15 ம்தேதி காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, கவுசல்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இறந்த கவுசல்யா
உடலை அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் எரித்து தடயத்தை மறைத்துள்ளனர்.
இதுகுறித்து அண்டக்குடி குரூப் கிராம நிர்வாக அலுவலர் ஹேமா கொடுத்த புகாரின் பேரில் எமனேசுவரம் காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து,பரமக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் விசாரணை நடத்தினார்.
கொலை
விசாரணையில் வேறொரு சமுதாயத்தை சேர்ந்ந வாலிபர் கனகராஜை கவுசல்யா காதலித்து திருமணம் செய்து கொண்டது பிடிக்காததால் அவரது பெற்றோர் தென்னரசு, அமிர்தவள்ளி தங்களது மகளை கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து எமனேசுவரம் காவல் துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து கவுசல்யாவின் தந்தை தென்னரசு(58), அமிர்தவள்ளி(48) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் பரமக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.