July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை

1 min read

Action check on premises owned by former minister Vijayabaskar

18.10.2021
வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடி சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

சோதனை

அ.தி.மு.க. ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர்கள் சொத்துக்களை சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோரது வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய 2 இடங்களில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோடு, சேத்துப்பட்டு ஹாரிங்டன்ரோடு ஆகிய 2 இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள் உள்ளன. இந்த 2 வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தினார்கள். டெய்லர்ஸ் ரோடு வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது வீட்டின் முன் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் நிர்வாகிகள் குவிந்தனர்.

உறவினர்கள் வீடு

மேலும் நிர்வாகிகள் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர்கள், உறவினர்கள் ஆகியோரது வீடுகளிலும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

விஜயபாஸ்கரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆகும். அமைச்சராக இருந்த காலத்தில் அவர் தனது சொந்த மாவட்டமான புதுக்கோட்டை உள்பட பல இடங்களில் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை வாங்கி இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கரின் சகோதரர் நடத்தி வரும் மதர் தெரசா அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதர் தெரசா பாலிடெக்னிக், கல்வி நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் 43 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். விஜயபாஸ்கரின் சொந்த ஊரான இலுப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 29 இடங்களில் சோதனை நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தனது வேட்புமனு தாக்கல் பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு ரூ. 6 கோடி 44 லட்சத்து 91 ஆயிரத்து 310 என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வில் அவர் சொத்து பல மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்தது. 1.4.2016 முதல் 31.3.2021 வரையில் அவரது சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடிக்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விஜயபாஸ்கர் பெயர் முதலாவதாகவும், ரம்யாவின் பெயர் 2-வதாகவும் இடம் பெற்றுள்ளது.

விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலத்தில் தனது பெயரிலும், மனைவி, மகள்கள் பெயரிலும் அதிகளவில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் விராலி மலை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி ஏற்ற பிறகு ரூ.27 கோடிக்கு மேல் சொத்துக்களை வாங்கி இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லாரிகள்

மேலும் விஜயபாஸ்கர் 7 டிப்பர் லாரிகள், பி.எம்.டபிள்யூ கார் ஆகியவற்றை வாங்கி இருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எம்.டபிள்யூ காரின் மதிப்பு ரூ.53 லட்சத்து 33 ஆயிரத்து 156 என குறிப்பிடப்பட்டுள்ளது.

டிப்பர் லாரி உள்பட லாரிகளில் மதிப்பு ரூ.6 கோடியே 58 லட்சத்து 78 ஆயிரத்து 456 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 85.12 பவுன் தங்க நகைகளை விஜயபாஸ்கர் குடும்பத்தினர் வாங்கி இருப்பதாகவும் இதன் மதிப்பு ரூ. 40 லட்சத்து 58 ஆயிரத்து 975 எனவும் தெரிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் மொரப்பாக்கம் மற்றும் சில்லாவட்டம் பகுதிகளில் ரூ.3 கோடியே 99 லட்சத்து 5 ஆயிரத்து 400 மதிப்பில் விவசாய நிலங்கள் உள்ளதாகவும், சென்னையில் பகீரதி அம்மாள் தெருவில் உள்ள வீட்டின் மதிப்பு ரூ.14 கோடியே 57 லட்சத்து 65 ஆயிரம் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தற்போது விஜயபாஸ்கரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.58 கோடியே 64 லட்சத்து 25 ஆயிரத்து 887 என்பது தெரிய வந்துள்ளது.

புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் பீட்டர் அளித்த புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் பதிவு செய்துள்ளார்.

ராசி புளு மெட்டல்ஸ், கிரீன் லேண்ட் ஹைடெக் புரமோட்டர்ஸ், ஓம்ஸ்ரீவாரி ஸ்டோன்ஸ் நிறுவனம், ராசி என்ட்டர்பிரைசஸ், அனையா என்டர்பிரைசஸ், பி இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ், சாய் ஹரிதம் இன்ப்ரா பிரைவேட் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்கள் பெயரில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 43 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் மேலும் 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.