புத்தர் கோவில் இருக்கும் குஷிநகரில் ரூ.260 கோடியில் விமான நிலையம்; மோடி திறந்து வைத்தார்
1 min read
Rs 260 crore airport in Kushinagar, where Buddha Temple is located; Modi opened it
20/10/2021
புத்தர் கோவில் அமைந்துள்ள உத்தரப்பிரதேசம் குஷிநகரில் ரூ.260 கோடியில் கட்டப்பட்ட புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
புத்தர் கோவில்
உத்தரபிரதேச மாநிலத்தில், கோரக்பூரில் இருந்து 53 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது குஷிநகர். இது புத்த மதத்தினரின் புனிதத்தலம் ஆகும். இங்குதான் புத்தர் பிரான் தனது 80-வது வயதில் படுத்த கோலத்தில் மகாபரிநிர்வாணம் (பிறவா நிலை) அடைந்தார்.
அங்கு அதன் நினைவாக மகாபரிநிர்வாண கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில், புத்தர் மகாபரிநிர்வாணம் அடைந்த காட்சியை சிற்பமாக செதுக்கி வைத்துள்ளனர்.
விமானநிலையம்
இந்த நகரை, உலகெங்கும் உள்ள புத்த மத யாத்திரை தலங்களுடன் இணைக்கிற விதத்தில் சர்வதேச விமான நிலையம், ரூ.260 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச விமான நிலையத்தால், ஜப்பான், தென்கொரியா, இலங்கை, தாய்லாந்து, வியட்னாம், கம்போடியா, தைவான் போன்ற புத்த மதத்தை பெரும்பான்மையோரால் பின்பற்றுகிற நாடுகளில இருந்து புனிதப்பயணிகள் இங்கு வர வாய்ப்பு உருவாகி உள்ளது. இங்கு வந்து, புத்தர் மகாபரிநிர்வாணம் அடைந்த தலத்தை தரிசிக்கிற வாய்ப்பும் புத்த மதத்தினருக்கு கிடைக்கிறது.
இந்த சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரூ.260 கோடியில் கட்டப்பட்ட புதிய விமான நிலையத்தை திறந்து வைத்த பின் பிரதமர் மோடி பேசியதாவது:-
இரட்டிப்பு மகிழ்ச்சி
குஷிநகர் சர்வதேச விமான நிலையம் பல தசாப்த கால நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் விளைவாகும்.
விமான நிலையத்தை திறந்து வைத்தன் மூலம் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். ஆன்மிக பயணத்தில் ஆர்வமாக இருப்பதால், எனக்கு ஒரு திருப்தி உணர்வு இருக்கிறது. பூர்வாஞ்சல் பகுதியின் பிரதிநிதியாக, ஒரு உறுதிப்பாட்டை நிறைவேற்ற வேண்டிய நேரம் இது.
குஷிநகர் சர்வதேச விமான நிலையம் வெறும் விமான இணைப்பாக இருக்காது. விவசாயிகள், கால்நடை பராமரிப்பாளர்கள், கடைக்காரர்கள், தொழிலாளர்கள், உள்ளூர் தொழிலதிபர்கள் என அனைவருமே இதன் மூலம் பயனடைவார்கள். இது வணிகத்தை பெருக்க ஊக்குவிக்கும், விமான நிலையம் சுற்றுலாவாசிகளுக்கு அதிகபட்ச பலனை தரும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொழும்பில் இருந்து…
இதன் அடையாளமாக, முதல் விமானமாக இலங்கை தலைநகரான கொழும்பு நகரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புத்தபயணிகளுடன் இங்கு இன்று வந்தடைந்தது.