ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தகுதி இல்லை; சுப்ரீம்கோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை
1 min readThe Arumugasami Commission is not qualified to inquire into Jayalalithaa’s death; Apollo Hospital in the Supreme
Court
28/10/2021
ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தகுதி இல்லை என்று சுப்ரீம்கோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை கூறியுள்ளது.
ஆறுமுகசாமி ஆணையம்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.
விசாரணை ஆணையத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரி அப்பல்லோ மருத்துவமனை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து அப்பல்லோ மருத்துவமனை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. ஆணைய விசாரணைக்கு தடை கோரும் அப்பல்லோ மருத்துவமனையின் மனு, ஆணையத்தில் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக் கோரிய தமிழக அரசின் இடையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணை நீதிபதி அப்துல்நசீர் தலைமையிலான அமர்வு முன்பு நடந்த போது ஆறுமுகசாமி விசாரணை மீது அப்பல்லோ மருத்துவமனையினர் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
அந்த ஆணையம் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், விசாரணைக்கு இனி ஆஜராக மாட்டோம் என்றும் தெரிவித்தனர். மேலும் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது அப்போதைய அ.தி.மு.க. அரசு கூறியதால்தான் கண்காணிப்பு கேமராக்களை அகற்றினோம் என்றும் தெரிவித்தனர்.
தலையிட முடியாது
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் கூறும்போது, “ஆறுமுகசாமி ஆணையம் உண்மை கண்டறியும் ஆணையம்தான். உண்மை தகவல்களை திரட்டி வழங்குவது மட்டும்தான் விசாரணை ஆணையத்தின் வேலை. இதுவரை 50 அப்பல்லோ மருத்துவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மருத்துவர்கள் ஆலோசனை தர நீதிமன்றம் விரும்பினால் அதை செய்ய தயார். ஆலோசனை தரும் மருத்துவர்களை நாங்களே தான் தேர்ந்தெடுப்போம். அப்பல்லோ தலையிடக் கூடாது” என்று தெரிவித்தது.
தகுதி இல்லை
பின்னர் வழக்கு விசாரணையின்போது அப்பல்லோ தரப்பில் கூறும் போது, “சிகிச்சைக்கு முன் ஜெயலலிதா எப்படி மருத்துவமனைக்கு வந்தார் என்பதை விவாதிக்க தேவையில்லை. அவருக்கு எப்படி சிகிச்சை அளித்தோம் என்று தான் பார்க்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தகுதி இல்லை. வரம்பு மீறியும், ஒருதலைபட்சமாகவும் ஆறுமுகசாமி ஆணையம் நடந்து கொள்கிறது” என்று தெரிவித்தது.