தீபாவளிக்கு சரவெடிக்கு தடை; 2 மணிநேரமே வெடிக்க வேண்டும்
1 min readBan on Saravedi for Deepavali; Let explode for 2 hours
29.10.2021
பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு நிபந்தனைகளை விதித்துஉள்ளது. சரவெடி வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. 2 மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரியும், பட்டாசு வெடிக்கும் கால அளவை அதிகரிக்க கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, பசுமை பட்டாசு தயாரிப்பில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நபரின் மகிழ்ச்சிக்காக பிறரின் உடல் நலத்தையும், உயிரையும் பாதிக்கும் பட்டாசுகளை அனுமதிக்க முடியாது எனக் கூறினர். மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டவே நீதிமன்றம் உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், விதி மீறல் இல்லை என்ற பட்டாசு உற்பத்தியாளர்களின் கூற்று முற்றிலும் தவறானது என்றும் விதி மீறல் தொடர்பான ஆய்வு முடிவுகளும் உள்ளது என்றும் கூறி வழக்கை இன்றைக்க ஒத்தி வைத்தனர்.
உத்தரவு
அதன்படி இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பட்டாசு வழக்கில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுகளை அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை கொண்டாட்டம் என்ற பெயரில் அனுமதிக்கக் கூடாது என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்.
மேலும் இந்த உத்தரவை பொறுத்தவரை, குறிப்பாக முதியவர்கள், குழந்தைகளின் சுகாதார நலனை மீறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை, அதே நேரம் பட்டாசு வெடிப்பதை முழுமையாக தடை செய்யவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ள நீதிபதிகள், தடை செய்யப்பட்ட பட்டாசுகளுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சரவெடிக்கு தடை
மேலும் ‘பேரியம் நைட்ரேட்’ ரசாயணம் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கும், சரவெடி பட்டாசுகளுக்கும் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பட்டாசு வெடிப்பது தொடர்பான நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பின்பற்ற வேண்டும் என்றும், இந்த உத்தரவுகளை மீறினால், அந்தந்த மாநில தலைமைச் செயலாளர் அல்லது உள்துறை செயலாளர் அல்லது மாநகராட்சி போலீஸ் கமிஷனர் அல்லது காவல்நிலைய பொறுப்பு அதிகாரி உள்ளிட்டோர் மீது தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவின் மூலம் தெரிவித்துள்ளது.