தெலுங்கானாவில் ஓட்டுக்கு பணம் கேட்டு பெண்கள் தர்ணா
1 min readIn Telangana, women are demanding money for driving
29.0.2021
தெலுங்கானாவில் வருகிற 30-ந் தேதி நடக்க உள்ள சட்டசபை இடைத்தேர்தலில், ஓட்டுக்கு பணம் வழங்கவில்லை எனக்கூறி பல கிராமங்களில் பெண்கள் போராட்டம் நடத்தினர்.
இடைத்தேர்தல்
தெலுங்கானா மாநிலம் ஹூஜாராபாத் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் எடலா ராஜேந்தர். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சியை சேர்ந்த இவர், சந்திரசேகர ராவ் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக பதவி வகித்து வந்தார். முதல்வருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமைச்சரவையில் இருந்து விலகிய அவர், எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து காலியான அந்த தொகுதிக்கு, நாளை தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டன.
போராட்டம்
இந்நிலையில், அந்த தொகுதிக்கு உட்பட்ட சில கிராமங்கள் மற்றும் இரண்டு நகராட்சிகளை பகுதிகளை சேர்ந்த பெண்கள், ஓட்டுக்கு இன்னும் பணம் வழங்கவில்லை எனக்கூறி போராட்டம் நடத்தினர். ஓட்டுக்கு பணம் பெறுவது தங்களது உரிமை என்பதால், அதனை வழங்க வேண்டும் எனக்கூறிய அவர்கள், அரசியல்வாதிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
அண்டை கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தங்களுக்கு வழங்கவில்லை எனக்கூறி வினவக்கா மண்டலத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல், ஓட்டுக்கு பணம் கேட்டு பெண்கள் போராட்டம் நடத்திய தகவல் அறிந்ததும் ரங்கப்பூர், கட்ராப்பள்ளி மற்றும் பெடாபப்பியா பள்ளி கிராமங்களில் பணம் விநியோகம் செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது. போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதற்குள் போலீசார் படாதபட்டு பட்டனர். ஓட்டுக்கு பணம் கேட்டு பெண்கள் போராட்டம் நடத்திய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.
வாக்குவாதம்
ஒரு வீடியாவில், ஓட்டுக்கு பணம் கேட்டு, பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினருடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், மற்றொரு வீடியோவில், ஓட்டுக்கு முழுமையான அளவு பணம் கிடைக்கவில்லை. சிறிதளவு தான் கிடைத்துள்ளது. இதனால், நாங்கள் ஓட்டுப்போட மாட்டோம் எனக்கூறியும் காட்சிகள் பதிவாகி உள்ளது.