கோவை மாணவி தற்கொலை; தனியார் பள்ளி முதல்வர் அதிரடி கைது
1 min read
Coimbatore student commits suicide; Private school principal arrested in action
15/11/2021
கோவையில் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தனியார் பள்ளி முதல்வரை தனிப்படை போலீசார் பெங்களூருவில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
பாலியல் தொல்லையால் தற்கொலை
கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த 11-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாணவி ஆசிரியர் ஒருவரின் தொடர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அந்த மாணவி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 11-ம் வகுப்பு படித்தார். அப்போது அங்கு பணியாற்றிய இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி (வயது 31) என்பவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதனால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
ஆசிரியர் போக்சோவில் கைது

மேலும் போலீசார் மாணவியின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மாணவி எழுதிய கடிதமும் சிக்கியது. அதனடிப்படையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து, போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 26-ந் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, மிதுன் சக்கரவர்த்தி திருப்பூர் மாவட்டம் உடுமலை சிறையில் அடைக்கப்பட்டார்.
பள்ளி முதல்வர் கைது
தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்துள்ளார். ஆனாலும் பள்ளி முதல்வர் சம்பந்தபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் (52) என்பவர் மீதும் நேற்று முன்தினம் காலையில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவான அவரை பிடிக்க போலீசார் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் பள்ளி முதல்வரின் செல்போன் எண்ணை வைத்து அவர் எங்கு உள்ளார்? என்பது குறித்து ஆய்வு செய்தனர். அதில் அவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து கோவை அழைத்து வந்தனர்.
தொடர்ந்து காலை 7 மணிக்கு பள்ளி முதல்வரை கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு உள்ள முதல் தளத்தில் வைத்து போலீஸ் துணை கமிஷனர்கள் ஜெயச்சந்திரன், உமா ஆகியோர் தலைமையிலான போலீசார் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். இதனை போலீசார் பதிவு செய்து கொண்டனர்.
பின்னர் அவர் மகளிர் கோர்ட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தபட்டார். அவரை வருகிற 26-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்திர விட்டார் இதைதொடர்ந்து மீரா ஜாக்சன் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.