விவசாயிகளுக்கு ரூ.300 கோடி நிவாரணம்; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min read
Rs 300 crore relief to farmers; MK Stalin’s announcement
16.11.2021
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.300 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பயிர்கள் சேதம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. கனமழையால் பயிர்கள் பெரும் சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். மெலும் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதில் சாலைகள் மிகவும் மோசமடைந்தது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர் சேத விவரங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. அமைச்சர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தது.
ரூ.300 கோடி
இந்நிலையில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகாலை சீரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மழையில் முழுமையாக சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும் என்றும் சேதமடைந்த குறுவை, கார், சொர்ணவாரி பயிர்கள், முழுமையாக சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் கிராம நிர்வாக அலுவலர் மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு வங்கியில் செலுத்தப்படும் என்றும் முதல்-அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சேதமடைந்த பயிர்களை மறு சாகுபடி செய்ய ஏதுவாக ஹெக்டர் ஒன்றுக்கு 6,038 மதிப்பில் இடுபொருள் தரப்படும் என்றும் குறுகிய கால விதை நெல் 45 கிலோ, நுண்ணூட்ட உரம் 25 கிலோ, யூரியா 60 கிலோ, டிஏபி உரம் 125 கிலோ வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.