தமிழகத்தில் கல்லூரிகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம்
1 min read
Direct classes are compulsory 6 days a week in colleges in Tamil Nadu
22.11.2021
தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கல்லூரிகள்
தமிழ்நாட்டில் கொரோனா பிரச்னையால், ‘ஆன்லைன்’ வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டன. வீட்டில் இருந்தவாறே படித்த மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியிலேயே மூன்று செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், அடுத்த மாதம் நடக்க உள்ள செமஸ்டர் தேர்வுகளுக்கு, கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என, உயர் கல்வித்துறை அறிவித்தது. இந்த முடிவுக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, நேரடி செமஸ்டர் தேர்வு தான் நடத்தப்படும் எனவும், ஒரு மாத கூடுதல் அவகாசத்துக்கு பின், கல்லூரி மாணவர்களுக்கான நேரடி செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி மாதம் 20-ந் முதல் நடத்தப்படும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்தது.
வாரத்தில் 6 நாட்கள்
இந்நிலையில், உயர்கல்வித்துறை சார்பில் இன்று (திங்கட்கிழமை) வெளியான அறிவிப்பில், ‘கல்லூரிகள், பல்கலைகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடத்த வேண்டும். மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத் திட்டங்களை வழங்கிட வேண்டும். ஜனவரி 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள், அதற்குமுன் மாதிரி செமஸ்டர் தேர்வுகள் நடத்த வேண்டும்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.