June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

‘ஒமிக்ரான்’ வைரசை தற்போதுள்ள தடுப்பூசிகள் கட்டுப்படுத்துமா?

1 min read

Will existing vaccines control the Omigron virus?

28.11.2021-

புதிதாக பரபவும் ஒமிக்ரான் வைரஸ் தடுப்பூசிக்கு தப்பி விடும் தன்மை கொண்டுள்ளது.

ஒமிக்ரான் வைரஸ்

கொரோனா வைரஸ் உருமாற்றம் ஆகி வருகிறது. அதில் உலகையே மீண்டும் அச்சுறுத்தும் உருமாறிய கொரோனாவுக்கு “ஒமிக்ரான்” என்று பெயர் சூட்டப்பட்டுஉள்ளது. இதனால் ஒமிக்ரான் ஒரே நாளில் உலகம் அறிந்த பெயராகி இருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவில் நவம்பர் 24-ந் தேதி கண்டறியப்பட்டுள்ள பி.1.1.529 வைரசுக்கு உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ள பெயர்தான் இது. இந்த பெயர், கிரேக்க எழுத்துகளின் 15-வது எழுத்து என்கிறார்கள். இந்த வைரஸ் தொடர்பாக சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் உலக சுகாதார அமைப்பின் வல்லுனர் குழு அவசரமாக கூடி விவாதித்தது.

அதில், இந்த உருமாறிய வைரசை உலக சுகாதார அமைப்பு வி.ஓ.சி. அதாவது, கவலைக்குரிய பிறழ்வு என்று வகைப்படுத்தி உள்ளது. இப்படி விஞ்ஞானிகளையெல்லாம் கவலைப்பட வைத்துள்ள இந்த வைரசில் அப்படி என்னதான் இருக்கிறது?

விஞ்ஞானிகள் கருத்து

இந்த வைரசின் தாயகமாக மாறியுள்ள தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் வோல்ப்காங்க் பிரீசர், கேதரின் சீப்பர்ஸ், ஜினால் பீமன், மேரீட்ஜீ வென்டர் கூறும் தகவல்கள் வருமாறு:-

  • இந்த வைரசில் கவலைப்பட வைக்கிற பிறழ்வுகள் இருக்கின்றன. இவை இதற்கு முன்பு காணப்பட்டது இல்லை. ஸ்பைக் புரதத்தில் மட்டுமே 30 பிறழ்வுகள் இருக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றை தோற்கடிக்க முடியாத ஒரு நோயாளியின் உடலில் இருந்துதான் இத்தனை அதிக பிறழ்வுகள் ஏற்பட்டிருக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது.
  • இது மிகவும் மாறுபட்ட மரபணு தன்மைகளை கொண்டுள்ளது. இந்த வைரஸ் டெல்டா வைரசின் மகள் என்றோ பீட்டா வைரசின் பேரன் என்றோ கூற முடியாது. மாறாக இந்த வைரஸ், கொரோனாவின் புதிய பரம்பரையை கொண்டுள்ளது.
  • பிற பிறழ்வுகளில் இருந்து இந்த வைரசின் மரபணு மாற்றங்கள் அறியப்படுகின்றன. இவை வேகமாக பரவலாம். நோய் எதிர்ப்பு தன்மையில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் பல அம்சங்கள் புதியவையாக இருப்பதால் இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
  • பிறழ்வுகள் எவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆராய்ந்து வருகிறோம்.

தடுப்பூசிக்கு தப்பிடும் தன்மை

  • இந்த வைரசின் பரவும் தன்மை, நோயின் தீவிரத்தன்மை, திறன், தடுப்பூசிக்கு தப்பி விடும் தன்மை உள்ளிட்டவை பற்றி ஆராய வேண்டியதிருக்கிறது.
  • தென் ஆப்பிரிக்காவில் 4-வது அலை தொடங்குவதாக தோன்றும் சூழலில் கவுடெங்கில் பி.1.1.529 வைரஸ் பரவல் வேகமாக உள்ளது. இது எளிதில் பரவும் தன்மையை குறிக்கிறது.
  • கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் இந்த புதிய வைரஸ் தாக்கி இருக்கிறது.

குழப்பம்

  • நோய் எதிர்ப்பு தன்மையை இந்த வைரஸ் தவிர்க்கும் என்பதற்கான சாத்தியக்கூறு குழப்பமாக இருக்கிறது என்று தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால்தானோ என்னமோ உலக நாடுகள் எல்லாம் இந்த ஒமிக்ரான் வைரசை கட்டுப்படுத்தும் முயற்சியில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் பயண தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்த வைரசுக்கு உலக சுகாதார அமைப்பு பெயரிட்டு, கவலைக்குரிய பிறழ்வாக வகைப்படுத்தி அறிவித்த பின்னர் இந்த நடவடிக்கை சூடுபிடித்துள்ளது.

ஒமிக்ரான் வைரஸ் பல பிறழ்வுகளை கொண்டிருக்கிறது, இது அதிகளவில் பரவுகிற தன்மையை கொண்டிருக்கிறது என்பதற்கு ஆரம்ப ஆதாரங்கள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

61 பேருக்கு…

இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவில் இருந்து நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டெர்டாம் நகருக்கு வந்திறங்கிய 2 விமான பயணிகளை சோதித்ததில் 61 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அவர்கள் விமான நிலையம் அருகே உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

தென் ஆப்பிரிக்க விமானங்களுக்கு பல நாடுகள் தொடர்ந்து தடை விதிக்கின்றன. அமெரிக்கா இந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது. தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, நமீபியா, லெசொத்தோ, எஸ்வாதினி, மொசாம்பிக், மலாவி விமானங்கள் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா 2 வாரங்களுக்கும், ஜப்பான் 10 நாட்களுக்கும் இந்த விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. ஈரான், பிரேசில், கனடா, தாய்லாந்து என தடை விதிக்கும் நாடுகளின் பட்டியல் நீளுகிறது. ஒமிக்ரான் வைரஸ் பற்றிய தகவல்கள் பதற வைத்தாலும் நம்பிக்கை அளிக்கும் தகவலும் இருக்கிறது.

இந்த தகவல் உலகளவில் பிரபலமான மருந்து நிறுவனங்களான அமெரிக்காவின் பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோ என்டெக் ஆகியவற்றிடம் இருந்து வந்திருக்கிறது.

100 நாளில்…

இந்த நிறுவனங்கள் அப்படி என்ன நம்பிக்கையூட்டும் தகவல்களை சொல்லி இருக்கிறார்கள் என்றால், புதிய கொரோனா வைரஸ் ஒமிக்ரான், தடுப்பூசிகளுக்கு தப்புகிற தன்மையைக் கொண்டுள்ளதா என்பதை இப்போதே உறுதியாக சொல்லி விட முடியாது. அப்படி இந்த வைரஸ் தற்போது புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகளில் இருந்து தப்புகிற தன்மையை கொண்டிருந்தால், நாங்கள் 100 நாளில் புதிய தடுப்பூசியை கண்டுபிடிப்போம் என்று அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிறுவனங்கள், 2 வாரங்களுக்குள் இந்த வைரஸ் பற்றிய கூடுதல் தகவல்களை எதிர்பார்க்கின்றன. பல மாதங்களுக்கு முன்பாகவே புதிதாக உருமாறிய வைரஸ்கள் தோன்றலாம் என்ற எதிர்பார்ப்பில் இந்த நிறுவனங்கள் புதிய தடுப்பூசி ஆராய்ச்சியை தொடங்கி விட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.