சபரிமலையில் பக்தர்கள் வெடி வழிபாடு நடத்த அனுமதி
1 min read
Devotees allowed to perform explosive worship at Sabarimala
29.11.2021
சபரிமலையில் பக்தர்கள் வெடி வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
சபரிமலை
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது.
கொரோனா பிரச்சினை யால் கடந்த ஆண்டு பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால் கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு அறிவிக்கப்பட்டது.
அதன்படி கோவிலுக்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வருகிற 1-ந்தேதி முதல் 40 ஆயிரம் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சன்னிதானம்
இது தவிர உடனடி முன்பதிவு மூலம் மேலும் 5 ஆயிரம் பக்தர்களும் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
வெடி வழிபாடு
சபரிமலை செல்லும் பக்தர்கள் ஐயப்பனை வேண்டி வெடி வழிபாடு நடத்துவது வழக்கம். கொரோனா பிரச்சினையால் இந்த வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் முதல் இந்த தடை விலக்கப்பட்டு, பக்தர்கள் கோவிலில் வெடி வழிபாடு நடத்தலாம் என அறிவிக்கப்பட் டுள்ளது.
தினமும் அதிகாலை 4 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பக்தர்கள் வெடி வழிபாடு நேர்ச்சை நடத்திக் கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.
கொரோனா பிரச்சினையால் பக்தர்கள் கோவில் சன்னிதானத்தில் இரவு நேரத்தில் தங்க கூடாது என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. தற்போது இந்த தடையையும் விலக்கி கொள்ள கோவில் நிர்வாகம் முன்வந்துள்ளது.
மாலையில் மலையேறும் பக்தர்கள், இரவில் சன்னிதானத்தில் உள்ள அறைகளில் தங்குவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கும் அறைகள் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஓரிரு நாளில் இதற்கான அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது.
சபரிமலை கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி திறக்கப்பட்டது. 16-ந்தேதி முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டார்கள். நடை திறந்து 11 நாட்களில் கோவிலுக்கு 1 லட்சத்து 19 ஆயிரத்து 238 பக்தர்கள் தரிசனத்திற்கு சென்றுள்ளனர்.
இந்த எண்ணிக்கை இனி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 11 நாட்களில் கோவில் வருமானம் ரூ.10 கோடியை கடந்து உள்ளது.
பிரசாதம்
கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலில் வழங்கப்படும் அப்பம், அரவணை பிர சாதங்களை வாங்கிச் செல்வார்கள். கோவிலுக்கு வராத பக்தர்களுக்கு தபால் மூலம் பிரசாதம் அனுப்ப கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி 3 வகை கட்டணத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது.
ஒரு அரவணை மற்றும் அர்ச்சனை பிரசாதம் ரூ.450-க் கும், 4 அரவணை, அர்ச்சனை பிரசாதம் ரூ.830-க்கும், 10 டின் அரவணை அடங்கிய பாக்கெட் ரூ.1510-க்கும் வழங்கப்படுகிறது.