May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழ் ரசிகர்கள் மனங்கவர்ந்த ‘கன்னடத்துப்பைங்கிளி’ சரோஜாதேவி

1 min read

Saroja Devi is the favorite actress of Tamil fans

தமிழ் ரசிகர்கள் மனங்கவர்ந்த ‘கன்னடத்துப்பைங்கிளி’ சரோஜாதேவி
(இன்று 85-வது பிறந்தநாள்)


1960 காலகட்டம்.
கருப்பு-வெள்ளைப் படங்கள் தான் அதிகம்.
அந்த கருப்பு-வெள்ளையிலும் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர், சரோஜாதேவி.
கன்னடத்துப் பைங்கிளி, அபிநயசரஸ்வதி என்று போற்றப்பட்ட சரோஜாதேவியின் இயற்பெயர், ராதாதேவி.
பெங்களூருவைச் சேர்ந்த காவல் துறை அதிகாரி ஜாவர் பைரப்பா&- ருத்ரம்மா தம்பதிக்கு நான்காவது மகளாக 1938 ஜனவரி 7-ந் தேதி பிறந்தவர், சரோஜாதேவி. ஏற்கனவே மூன்று பெண் பிள்ளைகள்; நான்காவதாக பையன் பிறப்பான் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். பிறந்தது, ராதாதேவி.


பின்னாளில் இதைப் பற்றி சொல்லும்போது, ”நானும் பெண்ணாகப் பிறந்துவிட்டதால் என் தாத்தாவுக்கு பயங்கர கோபம். ‘யாருக்கு வேண்டும் இந்தச் சனியன்?’ என்று முணுமுணுப்பாராம். நான் தவழ்கிற வயதில் இருந்தபோது எனக்கு முடக்குவாதம் வந்துவிட்டதாம். என் அம்மா எனக்காக விரதம் இருந்த சமயத்திலும், ‘இது செத்தா சாகட்டுமே’ என்பாராம் தாத்தா. ஆனால், நான் வளர்ந்து பெரியவளானபோது என்னை அதிகமாக ஆசீர்வதித்தவர் என் தாத்தா” என்று குறிப்பிட்டுள்ளார், சரோஜாதேவி.
பள்ளியில் படித்தபோது, இசைப் போட்டி ஒன்றில் பங்கேற்று இந்திப் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த கன்னட திரையுலக ஜாம்பவான் ஹொன்னப்ப பாகவதர், சரோஜாவின் குரலில் அசந்துபோனார். தனது படத்தில் பின்னணிப் பாடுவதற்கு அழைத்துள்ளார். மகிழ்வுடன் பாடல் ஒத்திகைக்காகச் சென்றவரின் தோற்றப் பொலிவைப் பார்த்தார்கள். ராதாதேவி, நடிகை சரோஜாதேவி ஆனார்.
ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த ‘மகாகவி காளிதாஸ்’ என்ற கன்னடப்படத்தில் (1955) கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது.
இந்தக் கன்னடத்துப் பைங்கிளியை, கேமரா வழியாகப் பார்த்த அன்றைய நடிகர்கள், ‘ஒரு பக்கம் பார்த்தால் பத்மினி; மறுபக்கம் பார்த்தால் வைஜெயந்தி மாலா’ என்று கொண்டாடினர். அப்பேர்ப்பட்ட அழகுகொண்டவர்.
தமிழில் ஆரம்பத்தில், ‘தங்கமலை ரகசியம்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.
‘பார்த்திபன் கனவு’ படத்தில் கதாநாயகி வைஜெயந்தி மாலாவுக்குத் தோழியாகத் தலைகாட்டினார்.
சரோஜாதேவிக்கு, தமிழ்நாட்டில் பெரிய புகழைத் தேடித்தந்த முதல் படம் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் (1958).

நாடோடி மன்னனின் பாதிக் கதை வரை பானுமதியும், மீதியில் சரோஜாதேவியும் நாயகிகள். இதன்பிறகு எம்.ஜி.ஆரின் ஆஸ்தான நாயகியாகவே ஆன சரோஜாதேவி, அரசகட்டளை வரை அவருடன் 26 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார்.
(நாடோடி மன்னன் பாணியில் அரசகட்டளையில், சரோஜாதேவிக்கு விடை கொடுத்த எம்ஜிஆர், அந்த இடத்திற்கு ஜெயலலிதாவைக் கொண்டு வந்தார்).

ஸ்ரீதரின் காவியப்படமான கல்யாணப்பரிசில் ஜெமினி கணேசனுடன் ஜோடி சேர்ந்த சரோஜாதேவி, தன் பண்பட்ட நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அந்தப்படம் அவருக்கு நட்சத்திர அந்தஸ்து பெற்றுத்தந்தது.
பரதநாட்டியம் தெரியாது; நாடகத்தில் நடித்த அனுபவம் கிடையாது; கவர்ச்சி காட்டவே மாட்டார்; கவர்ச்சி உடைகள் அணியவே மாட்டார் என வெள்ளித்திரையில் ஜொலிப்பதற்குத் தேவையான பல விஷயங்கள் சரோஜாதேவியிடம் கிடையவே கிடையாது. ஆனாலும் தன் உழைப்பாலும் நளினத்தாலும் கொஞ்சு தமிழ்ப்பேச்சாலும் ஜொலித்தவர், சரோஜாதேவி.
அதிலும் நடிகர் திலகத்தின் புதிய பறவை படத்தில் அவர் உச்சரித்த ‘கோப்பால்’ என்ற சொல் இன்று வரை ரசிகர்களை வசீகரித்து இழுக்கிறது.
சரோஜாதேவி, எம்ஜிஆருடன் ஜோடி சேர்ந்த தாய் சொல்லைத்தட்டாதே, தாய்க்குப்பின் தாரம், அன்பே வா, எங்க வீட்டுப்பிள்ளை, படகோட்டி, என் கடமை, தாய் சொல்லைத் தட்டாதே, ஆசைமுகம், கலங்கரை விளக்கம், குடும்பத்தலைவன், நீதிக்குப்பின் பாசம், பெற்றால் தான் பிள்ளையா உள்ளிட்ட அத்தனை படங்களிலுமே கிளாமர் ரோல் தான்.
ஆனால் நடிகர் திலகத்துடன் நடித்த பெரும்பாலான படங்களில் சிறப்பான நடிப்பை சரோஜாதேவி வெளிப்படுத்தினார். அவற்றில் பாகப்பிரிவினை, பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், ஆலயமணி, புதிய பறவை, இருவர் உள்ளம் என அத்தனை படங்களிலும் நடிப்பில் மிளிர்ந்தார். இருவர் உள்ளம் கதாபாத்திரங்களின் தொடர்ச்சியாக, ஒன்ஸ்மோர் படத்தில் சிவாஜி-சரோஜாதேவி இணை, முதிய தம்பதியாக நடித்தது.
தமிழ் சினிமா உலகில் 60 முதல் 70 வரையான காலகட்டங்களில் 15 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்த சரோஜாதேவி, மக்கள் திலகம் எம். ஜி. ஆருடன் 26, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் 22 படங்களில் கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றவர்.
1960-1970 காலகட்டத்தில் பத்மினி, சாவித்திரி, சரோஜா தேவி ஆகிய மூவர் தான் முப்பெரும் முன்னணி கதாநாயகிகளாக கருதப்பட்டவர்கள்.
சரோஜாதேவி 1967 மார்ச் 1 அன்று பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பொறியாளர் ஸ்ரீ ஹர்ஷாவை மணமுடித்தார். அந்த நேரத்தில், அவர் நிதி நெருக்கடி மற்றும் வருமான வரிச்சிக்கல்களை எதிர்கொண்டார். இந்த சிக்கல்களை சமாளிக்க அவருடைய கணவர் உதவினார், மேலும் நிதியை எவ்வாறு நிர்வகிப்பது என்று அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.
திருமணத்திற்கு பிறகு கணவரின் அனுமதியுடன் நடிக்க ஆரம்பித்தார்.
அவரது 100வது திரைப்படம் பெண் என்றால் பெண்.
“எனது பிறவிப் பயன்” என்று தமிழ் மொழியை நேசித்த அவர், “தமிழ்த்திரையுலக ரசிகர்கள் எனக்கு கிடைத்த பெரும் வரம்” என்று பெருமைப்பட்டார்.
சரோஜாதேவியின் கணவர் ஸ்ரீஹர்ஷா, 1986 இல் மரணம் அடைந்தார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு உள்பட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள சரோஜாதேவி, இந்திய அரசின் பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகளையும் வென்றுள்ளார்.

-மணிராஜ்,
திருநெல்வேலி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.