May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

‘நியோகோவ்’ மனிதர்களுக்கு பரவுமா? -விஞ்ஞானிகள் விளக்கம்

1 min read

Will ‘Nyokov’ spread to humans? -Scientists interpretation

30.1.2022

கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. அந்த வகையில் உருமாறிய ‘நியோகோவ்’ மனிதர்களுக்கு பரவ வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

கொரோனா

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ்உலகம் முழுவதும் பரவியது. தற்போது வரை அந்த பெருந் தொற்று முடிவுக்கு வராமல் பாதிப்புகள் தொடர்ந்த படியே இருக்கிறது.

கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டன.
ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று உருமாறிய கொரோனாக்களுக்கு உலக சுகாதார அமைப்பு பெயரிட்டது. இதில் டெல்டா வகை கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஒமைக்ரான்

இதற்கிடையே கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இது வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றாலும் டெல்டாவை விட குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக இருக்கிறது.

நியோகோவ்

இந்தநிலையில் சீனாவின் வூகான் வைராலஜி ஆய்வகம் மற்றும் சீன அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள் கொரோனா குடும்பத்தை சேர்ந்த ‘நியோகோவ்’ என்ற புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்து சீன விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-

மனிதர்களுக்கு….

வவ்வாலிடம் ‘நியோகோவ்’ கொரோனா வைரஸ் காணப்படுகிறது. இந்த வைரசில் இருந்து ஒரு மரபணு மாற்றம் ஏற்பட்டால் கூட மனிதர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது.

இந்த வைரஸ் அதிக உயிரிழப்பை ஏற்படுத்த கூடியதாகும். ‘நியோகோவ்’ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் 3-ல் ஒருவர் உயிரிழக்க கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

‘நியோகோவ்’ வைரஸ் தொடர்பாக ஆய்வு அறிக்கையை சீன விஞ்ஞானிகள் உலக சுகாதார அமைப்பிடம் வழங்கி உள்ளனர்.

இந்த புதிய வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துமா என்பது குறித்து கூடுதல் ஆய்வு தேவைப்படும். தென் ஆப்பிரிக்காவில் வாழும் வவ்வாலிடம் ‘நியோகோவ்’ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

இந்தநிலையில் ‘நியோகோவ்’ வைரஸ் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பில்லை என்றும் அது பற்றி பயப்பட வேண்டாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

பொதுவாக விலங்குகளிடையே பரவும் ஒரு வைரஸ் மனிதர்களுக்கும் பரவ வேண்டுமென்றால் அதற்கு அந்த வைரஸ் உருமாற்றம் அடைய வேண்டும். மனிதர்களிடம் பரவுவதற்கு ஏற்ற குணங்கள் ஆர்.என்.ஏ., டி.என்.ஏ., புரோட்டின் ஆகியவை அந்த வைரசில் இருக்க வேண்டும். இவைகளை உள்ளடக்கிய உருமாற்றம் அடைந்த வைரஸ்கள்தான் மனிதர்களிடையே பரவும் திறனை கொண்டிருக்கும்.

வவ்வாலிடம் உள்ள சார்ஸ் கோவிட் குடும்ப வைரஸ்கள் உருமாற்றம் அடைந்து மனிதர்களுக்கு பரவியது.

தற்போது சார்ஸ் கோவிட் வைரஸ் குடும்பத்தில் இருந்து ‘நியோகோவ்’ வைரஸ் வந்திருக்கிறது. இது கொரோனா வைரசின் உருமாற்றம் கிடையாது.

வாய்ப்பு இல்லை

‘நியோகோவ்’ வைரஸ் இன்னும் மனிதர்களிடம் கண்டறியப்படவில்லை. தற்போது இந்த புதிய வைரஸ் மனிதர்களிடையே தீவிரமாக பரவும் தன்மை கொண்டதாக இல்லை. எனவே தற்போதைய நிலையில் ‘நியோகோவ்’ வைரஸ் பற்றி பயப்பட தேவையில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

அதேவேளையில் மற்றொரு எச்சரிக்கையையும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். ‘நியோகோவ்’ வைரசில் ஒரே ஒரு சிறிய உருமாற்றம் அடைந்தால் கூட மனிதர்களிடம் பரவக்கூடிய திறனை பெற்றுவிடும்.

ஏனென்றால் ‘நியோகோவ்’ வைரஸ் கொரோனா மற்றும் மெர்ஸ் வைரஸ் ஆகிய இரண்டின் கலவையாக உள்ளது. மிகவும் வேகமாக பரவி மிக அதிக மரணத்தை ‘நியோகோவ்’ வைரஸ் ஏற்படுத்திவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 1920-ம் ஆண்டுகளில் பறவைகளிடம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. 2003-ம் ஆண்டில் சீனாவில் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதற்கு சார்ஸ் என்று பெயரிடப்பட்டது. 2012-ம் ஆண்டு புதிய வகை கொரோனா சவுதி அரேபியாவில் பரவியது. இதற்கு மெர்ஸ் என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.