தமிழகத்தில் ரூ.28,307 கோடியில் நடக்கும் 25 ரயில்வே திட்டங்கள்
1 min read
28 railway projects worth Rs 28,307 crore in Tamil Nadu
4.2.2022
”தமிழகத்தில் ரூ.28,307 கோடி மதிப்பிலான 25 ரயில்வே திட்டங்கள் நடக்கின்றன,” என்று, ரயில்வே பொது மேலாளர் ஏ.கே.அகர்வால், கூடுதல் பொது மேலாளர் பி.ஜி.மல்லையா தெரிவித்தனர்.
ரயில்வே பொது மேலாளர் ஏ.கே.அகர்வால், கூடுதல் பொது மேலாளர் பி.ஜி.மல்லையா ஆகியோர் இணையவழியில் அளித்த பேட்டியில் அவர்கள் கூறியதாவது:-
ரூ.2374 கோடி ஒதுக்கீடு
ரயில்வே பாதுகாப்பு பணிகளுக்கு மூன்றாண்டுகளில் ஒதுக்கப்பட்டதை விட அதிகளவாக ரூ.2374 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்பாதை மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.1470 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இரட்டை அகல ரயில் பாதை திட்டங்களுக்கு 283, அகல ரயில் பாதை திட்டங்களுக்கு 73 சதவீதம் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடக்கும் ரூ.28,307 கோடி மதிப்பிலான 25 ரயில்வே திட்டங்களுக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி 3077 கி.மீ., ரயில் பாதை திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்படும். இந்தப்பணிகளுக்காக இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.3865 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2014 ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட நிதியை விட 340 சதவீதம் அதிகம்.
தனுஷ்கோடி
ராமேஸ்வரம் – தனுஷ்கோடி 17.2 கி.மீ., துாரத்திற்கு அமையும் ரயில் பாதை பணிக்கு ரூ.59 கோடி, மதுரை – போடி அகல ரயில் பாதை பணிகளுக்கு ரூ.125 கோடி, புதிய நவீன பாம்பன் ரயில் பால பணிகளுக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்விகாஸ் நிகாம் மூலம் நடக்கும் ரயில் பாதை பணிகளுக்கு ரூ.789 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் நடந்து வரும் ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகளுக்காக மட்டும் ரூ.303.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.