மருத்துவ கல்லூரி விடுதியில் மொட்டை அடித்து கைகளை கட்டி மாணவர்கள் ராகிங் ?
1 min read
Rocking students shaving hands and shaking hands at the Medical College hostel?
6.3.2022
மருத்துவ கல்லூரி விடுதியில் மாணவர்களை மொட்டை அடித்து கைகளை கட்டி நடக்குமாறு ராகிங் செய்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராகிங்
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்டுவானி மருத்துவ கல்லூரியில் அடிக்கடி ராகிங் நடப்பதாக புகார்கள் எழுவதுண்டு.
கடந்த 2009-ம் ஆண்டு இந்த கல்லூரியில் ராகிங்கை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஹல்டுவானி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 27 எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்கள் மொட்டையடிக்கப்பட்டு வரிசையாக நடந்து செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த 27 மாணவர்களும் முதுகில் பையை சுமந்தபடி கைகளை பின்னால் கட்டிக்கொண்டு நடக்கிறார்கள்.
தலையை குனிந்தபடி நடந்து செல்லும் அவர்கள் லேப் உடையும், முககவசமும் அணிந்துள்ளனர். எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு மாணவர்கள் அவர்களை மொட்டையடித்து இப்படி கைகளை கட்டி ராகிங் செய்து நடக்கவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதிர்ச்சி
உத்தரகாண்ட் மாநிலத்தில் வைரலாக பரவிய இந்த வீடியோ காட்சியை கண்டதும் அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை கல்லூரி முதல்வர் மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்யப்பட்டதாக இதுவரை எந்த புகாரும் என்னிடம் வரவில்லை. இந்த மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் அடிக்கடி தலையை மொட்டை அடித்துக்கொள்வார்கள். அதை ராகிங்குடன் முடிச்சு போட முடியாது.
முதலாம் ஆண்டு வகுப்புக்கு சேரும்போதே நிறைய மாணவர்கள் ராணுவ வீரர்கள் போன்று ‘மிலிட்டரி ஹேர் கட்டிங்’ செய்து இருந்தனர். மாணவர்கள் தலைமுடி அலங்காரத்தை அடிக்கடி மாற்றிக்கொள்வது இங்கு சாதாரணமானது தான். இதை யாரோ திசை திருப்பி உள்ளனர்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.
என்றாலும் உத்தரகாண்ட் மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மொட்டை அடிக்கப்பட்பட்டார்களா? என்று விசாரணை நடந்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த ஒரு மாணவரும் ராகிங் தொடர்பாக புகார் கொடுக்கவில்லை.
கடந்த 2019-ம் ஆண்டும் இதே கல்லூரியில் மாணவர்கள் மொட்டையடிக்கப்பட்டு ராகிங் நடந்ததாக கூறப்பட்டது. அப்போது எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.