“ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது”- அப்பல்லோ டாக்டர் விளக்கம்
1 min read
“Jayalalithaa had a heart attack” – Dr. Apollo
8.3.2022
“ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது” என்று அப்பல்லோ டாக்டர் விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், பணியாளர்கள், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் என 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்திய நிலையில் சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு தடை விதித்தது.
இதன்காரணமாக 2¾ ஆண்டுகளாக விசாரணை எதுவும் நடைபெறவில்லை. இந்தநிலையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு உதவியுடன் விசாரணையை மீண்டும் தொடர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்பல்லோ ஆஸ்பத்திரியின் நரம்பியல் நிபுணர் அருள்செல்வம், காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் பாபு மனோகர், வாத நோய் நிபுணர் ராமகிருஷ்ணன், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் சுந்தர், தொழில்நுட்ப உதவியாளர் காமேஸ் ஆகியோர் நேற்று விசாரணைக்காக ஆஜராகினர்.
இவர்கள் ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த நிலையில் சசிகலா தரப்பு கோரிக்கை விடுத்ததன்பேரில் அவர்களிடம் மறு விசாரணை நடைபெற்றது.
இந்தநிலையில் இன்று 2-வது நாளாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் நேரில் ஆஜராகினார்.
மாரடைப்புதான்
அவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், ஜெயலலிதா அவர்களுக்கு மாரடைப்புதான் ஏற்பட்டது என்றும்,உடனே அவருக்கு தேவையான மருத்துவ முறைகள் அனைத்தையும் தாங்கள் முறையாக பின்பற்றியதாகவும் அப்பல்லோ மருத்துவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம் விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை நடத்த உள்ளது எனவும் வரும் 15ம் தேதிக்கு பிறகு சம்மன் அனுப்ப விசாரணை ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.