July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும்-மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min read

Public welfare workers to be re-employed – MK Stalin’s announcement

8.4.2022
மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

மக்கள் நலப் பணியாளர்கள் குறித்த கேள்விக்கு, சட்டமன்றப் பேரவையில் இன்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-

ஊரகப் பகுதிகளில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், கிராம பொதுச் சொத்துக்களைப் பேணிக் காத்திடல், சிறு சேமிப்புத் திட்டத்திற்கு உதவுதல் போன்ற கிராம அளவிலான பல்வேறு பணிகளுக்காக முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரால் 2.9.1989-ல், ஒரு ஊராட்சிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்ற அடிப்படையிலே, மொத்தம் 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளுக்கு 25 ஆயிரத்து 234 மக்கள் நலப் பணியாளர்கள் அப்போது நியமனம் செய்யப்பட்டார்கள்.

13.07.1991-ல் இப்பணியிடங்கள் அன்றைய அ.தி.மு.க. அரசால் ரத்து செய்யப்பட்டது. உங்களுடைய அ.தி.மு.க. ஆட்சியில்தான் ரத்து செய்தீர்கள். மீண்டும் கழக ஆட்சி அமைந்ததற்குப் பின்பு, மீண்டும் இப்பணியிடங்கள் 24.2.1997 அன்று தோற்றுவிக்கப்பட்டன. பின்னர் அமைந்த உங்களுடைய அ.தி.மு.க. அரசால் 1.6.2001 அன்று மீண்டும் ரத்து செய்யப்பட்டது.

12.6.2006-ல் கலைஞரால் மீண்டும் இப்பணியிடங்களைத் தோற்றுவித்து, ஊராட்சிக்கு ஒருவர் என 12 ஆயிரத்து 618 மக்கள் நலப் பணியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. இறுதியாக 8.11.2011லும் அன்றைய அ.தி.மு.க அரசால் இப்பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டன.

எப்பொழுதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் ரத்து செய்திருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மீண்டும் அவர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள். இதுதான் மாறி, மாறி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வழக்கு

இதனுடைய தொடர்ச்சியாக, மக்கள் நலப் பணியாளர்கள் சார்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக மேல்முறையீட்டு வழக்குகளில் 19.8.2014 அன்று மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தால் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீளப் பணி வழங்க வேண்டுமென்ற அடிப்படையிலே தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேற்படி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து அப்போதைய அ.தி.மு.க. அரசு சார்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, 19.8.2014 நாளிட்ட உத்தரவில் சென்னை உயர்நீதிமன்றம் பணி நியமனம் வழங்க உத்தரவிட்டு அளித்த தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதித்தது. 11.8.2017 அன்று மேற்படி சிறப்பு விடுப்பு மனுக்களாக மாறுதல் செய்யப்பட்டு, கடைசியாக 28.2.2022 அன்று விசாரணைக்கு வரப்பெற்று தற்போது நிலுவையில் இருக்கிறது.

மீண்டும் வேலை

இந்த நிலையில், மக்கள் நலப் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினைக் கருத்தில்கொண்டு, இந்த அரசு பொறுப்பேற்றவுடன் அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக அவர்களோடு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

பின்னர், நிலுவையில் உள்ள வழக்கில், தீர்ப்பிற்கு உட்பட்டு நீதிமன்ற ஆணைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில், பின்வரும் முடிவுகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு உட்பட்டு எடுக்கப்பட்டுள்ளன.

மாநிலத்திலுள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் உள்ள “வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்” என்ற பணியிடத்தில் விருப்பம் தெரிவிக்கும் முன்னாள் மக்கள் நலப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, இப்பணி வாய்ப்பு வழங்கப்படும்.

இப்பணிக்கென ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பூதியத்தினை ரூ.3,000லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தியும், மக்கள் நலப் பணியாளர்கள் ஏற்கெனவே கிராம ஊராட்சிப் பணிகளில் பணியாற்றியதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கிராம ஊராட்சிப் பணிகளைக் கூடுதலாக கவனிக்க வாய்ப்பளித்து, அதற்கென மாநில நிதிக் குழு மானியத்திலிருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்கவும், இதன்படி இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒட்டுமொத்த மதிப்பூதியமாக ரூ.7,500 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நான் மகிழ்ச்சியோடு இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுமட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுக் காலத்தில், காலமான மக்கள் நலப் பணியாளர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு, அவர்கள் விரும்பினால், அவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்பணி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றக்கூடிய வாய்ப்பு வழங்கப்படும் என்பதையும் இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.