கண்ணாயிரத்தை தேடிவந்த குரங்கு/ நகைச்சுவை கதை
1 min read
A monkey eating something at a park in Nepal
The monkey that was looking for Kannayiram / comedy story by Thabasukumar
23.4.2022
கண்ணாயிரம் பயில்வானுக்கு பயந்து போட்டிருந்த மூன்று சட்டையை புளியமரத்தில் தொங்கவிட்டுவிட்டு வீட்டுக்கு போய்விட்டார். பின்னர் நண்பர் ஒருவர்கொடுத்த ஐடியாபடி வீட்டிலிருந்து கிழிந்த சட்டையை எடுத்துவந்து வீச குரங்கு ஒன்று கேச்பிடிக்க கண்ணாயிரம் டென்சன் ஆனார். கண்ணாயிரம் சட்டையை மாட்டிக்கொண்டு குரங்கு ஒன்று மரத்தில் பேஷன்ஷோ போல நடக்க ஊர்பொதுமக்கள் வேடிக்கைபார்த்தனர். கண்ணாயிரத்தின் நான்கு சட்டைகளும் குரங்கிடம் மாட்டியதால் அவர் ஓ என்று அழ அவரது நண்பர் சமாதானப்படுத்தினார். அவரை மற்றொருவர் கிண்டல் செய்ய அவர்கள் கட்டிப்புரண்டு சண்டைபோட்டு சட்டையை கழற்றி மேல வீச குரங்குகளும் கோபத்தில் தங்களிடம் இருந்த சட்டைகளை கீழே வீசின. ஆனாலும் கீழே கட்டிப்புரண்டு சண்டை போட்டவர்கள் தங்கள் மோதலை நிறுத்தாததால் குரங்குகள் கம்பை எடுத்துவந்து தடியடி நடத்த எல்லோரும் அலறிஅடித்து ஓடினார்கள். கண்ணாயிரம் தன்கையில் சிக்கிய மூன்று சட்டைகளை மட்டும் எடுத்துக்கொண்டு நாலு காலு பாய்ச்சலில் வீட்டுக்கு ஓடிவந்து மனைவியிடம் நடந்ததைகூறினார்.
அவரோ..மூணுசட்டை இங்கே இருக்கு இன்னொரு சட்டையை எங்கே என்று கேட்டார். உடனே கண்ணாயிரம் கோபத்துடன்…என்ன உனக்கு சட்டைதான் பெரிசா போச்சா…நானே குரங்கு நடத்திய தடியடியிலிருந்து தப்பிவந்திருக்கேன்.அது தெரியாம பேசுறீய..அந்த குரங்குகள் எங்கேயோ கூட்டத்தை கலைக்க போலீஸ் தடியடி நடத்தியதை பார்த்திருக்கும் போலிருக்குது..அதான் கம்பை எடுத்துட்டுவந்து எல்லோரையும் விரட்டு விரட்டுன்னு விரட்டிவிட்டுட்டு…தெரியுமா.. என்னைப்பார்த்து பாவமுன்னு அடிக்காம விட்டுட்டு.. இல்லன்னா எனக்கும் அடிவிழுந்திருக்கும்…என்றார்.
உடனே பூங்கொடி..எல்லாம் சரி..அந்த நாலாவது சட்டையை எங்கே…போய் எடுத்துட்டுவாங்க என்றார்.
கண்ணாயிரம் மெல்ல…அந்த குரங்குகள் அங்கேதான் நிற்கும்..போனா அடிக்கும் என்றார்.ஆனால் பூங்கொடியோ…ஏங்க குரங்கெல்லாம் ஓடிபோயிருக்கும்..போய் எடுத்துட்டு வாங்க என்று சொன்னார். கண்ணாயிரம்…அது..கிழிஞ்ச சட்டைதான போனா போகுது விட்டுருவோம் என்றார்.
பூங்கொடி கேட்கவில்லை. ஏங்க..கிழிஞ்ச சட்டைன்னாலும் தரை துடைக்க பயன்படும்..போய் எடுத்துட்டுவாங்க.என்று சொன்னார். கண்ணாயிரம்..ஏய் எனக்கு பயமா இருக்கு..நீவேணுமுன்னா கூடவா என்றார். பூங்கொடி கோபத்துடன் ஏங்க..என்னைக்கு உங்களுக்கு தைரியம் வரும்..போய் குரங்கோட மோதி சட்டையை மீட்டுக்கொண்டுவாங்க என்று கத்தினார்.
கண்ணாயிரத்துக்கு வேறுவழி இல்லை.குரங்கோடு மோதித்தான் ஆகவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்.பூங்கொடி…எனக்கு வீரம் வந்துவிட்டது..இதோபார்..செல்கிறேன் போருக்கு…விடைகொடு என்றார்.ஒரு கையில் அரிவாள் மற்றொரு கையில் ஒரு தடியுடன் புறப்பட்டார். பூங்கொடி..சரி..சரி..சீக்கிரம் போங்க..கிளிஞ்ச சட்டையை குரங்கு மேலும் கிழிச்சிடப்போகுது என்றார்.கண்ணாயிரம் ம்..சரி என்றபடி வேகமாக புறப்பட்டார்.அறையின் கதவை திறந்துகொண்டு புயலாக வெளியே வந்தார்.
அங்கே அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு குரங்கு கண்ணாயிரத்தின் கிழிந்த சட்டையை ஒரு கம்பில் தூக்கியபடி கண்ணாயிரம் வீட்டு முன் நின்றது. குரங்கை மடக்க அரிவாள் கம்புடன் புறப்பட்ட கண்ணாயிரத்தை பார்த்து சிரித்தது. கண்ணாயிரம் என்னசெய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போது குரங்கு கம்பில் தொங்கவிட்டிருந்த கிழிந்த சட்டையை தூக்கி கண்ணாயிரம் மேல் வீசியது. கண்ணாயிரம் அதை கேச் பிடித்தபோது குரங்கு…கேலியாக கண்ணாயிரத்தை பார்த்து சிரித்து விட்டு காவல்காரன்போல் கம்பை கழுத்தின் பின்னால்வைத்துக்கொண்டு இரண்டு கையால் பிடித்தபடி அங்கும் இங்கும் நோட்டமிட்டபடி சென்றது. கண்ணாயிரம் அப்பாட தப்பிச்சோம்..அரிவாளை காட்டியிருந்தோமுன்னா.. நம்மள இரண்டுபோடு போட்டிருக்கும்..அம்மாடி என்றபடி கதவை பூட்டினார். கண்ணாயிரம் போன உடனே திரும்பிவந்ததை பார்த்த பூங்கொடி…என்ன..போகலைய்யா..குரங்குக்கு பயமா..நான் நினைச்சேன்..நீங்க போகமாட்டிங்கன்னு தெரியும்.என்னைக்குதான் திருந்தபோறீங்க என்று அதட்டினார். கண்ணாயிரம் சட்டையை பின்பக்கம் மறைத்துவைத்திருந்தார். குரங்கு அதுவா கொண்டுவந்து சட்டையை கொடுத்துச்சுன்னு சொன்னா..நம்ம வீரத்தூக்கு அது இழுக்காகிடும். நாம சண்டைபோட்டு வாங்கினதா சொன்னாதான் கொஞ்சம் பெருமையா இருக்குமுன்னு நினைத்தார். உடனே…பூங்கொடி…நீ தப்பு கணக்கு போட்டுட்ட…இதோபார் சட்டையை..என்னை யாருன்னு நினைச்சா..நான் கதவை திறந்துகொண்டு புயலாக பாய்ந்து வெளியே போனேனா..என்கையிலெ..பளபளன்னு அரிவாள்..மற்றொரு கையிலே..தடி..நான் வேற கோபமா இருந்தேனா..என்னைப்பார்த்த குரங்கு ஆடிப்போயிட்டு. அப்படியே பயந்து பின்வாங்கிச்சு..நான்விடுவேனா..விரட்டினேன். காலில விழுந்துட்டு..சரி பிழைச்சு போகட்டுமுன்னு விட்டுட்டேன். அங்கே கிடந்த கிழஞ்ச சட்டையை கம்பால எடுத்துக்கிட்டு நேரவந்துட்டேன்…எப்படி என் வீரம் என்று சொல்லிக்கொண்டே போனார்.
அப்போது வீட்டு கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. பூங்கொடி…ஏங்க யாரது தட்டுறது..போய்பாத்துட்டுவாங்க என்று கத்தினார்.கண்ணாயிரம் யாரா இருக்கும் என்று எண்ணியபடி கையில் அரிவாளுடன் சென்று கதவை திறந்தார்.அங்கே அதிபயங்கர கோபத்துடன் குரங்கு நின்று கொண்டிருந்தது. பயந்தாங்கொள்ளிப்பயல..பாவம் போனாபோகுதுன்னு நான் கிழிஞ்ச சட்டையை பரிதாபப்பட்டு கொடுத்தா..என்னை அரிவாளை காட்டி மிரட்டி எடுத்திட்டு போனதா கதையாவிடுற…உன்னை என்ன செய்யுறன்பாரு என்பது போல் கண்ணாயிரம் மீது பாய முயன்றது. கண்ணாயிரம் கதவை பூட்டிவிட்டு நேராகபூங்கொடியை நோக்கி ஓடிவந்தார்.
வே.தபசுக்குமார்.புதுவை.