July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.க்கள் ஒதுக்கீடு ரத்து

1 min read

Allocation of MPs in Kendriya Vidyalaya schools canceled

27.4.2022
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.க்கள் ஒதுக்கீடை ஒன்றிய அரசு ரத்து செய்தது.

கேந்திரிய வித்யாலயா

நாடு முழுவதும் மத்திய அரசின் 1,200 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அவற்றில் 14.35 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான பல்வேறு ஒதுக்கீடுகளில் எம்.பி.க்களுக்கான விருப்ப ஒதுக்கீடும் அடங்கும்.
பாராளுமன்ற மக்களவையில் 543 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 245 எம்.பி.க்கள் என மொத்தம் 788 எம்.பி.க்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10 மாணவர்களை சேர்க்க சிபாரிசு செய்யலாம். இதன்மூலம் ஆண்டுக்கு 7 ஆயிரத்து 880 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

ரத்து

2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இந்த எம்.பி. விருப்ப ஒதுக்கீடு உள்பட அனைத்து விருப்ப ஒதுக்கீடுகளையும் நிறுத்திவைக்க கேந்திரிய வித்யாலயா சங்கதன் (கே.வி.எஸ்.) சில வாரங்களுக்கு முன்பு முடிவு செய்தது.

இந்நிலையில், எம்.பி.க்கள் ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதுதொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கேந்திரிய வித்யாலயா சங்கதன் (கே.வி.எஸ்.) வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

எம்.பி.க்கள் ஒதுக்கீடு ரத்து மட்டுமின்றி, மத்திய கல்வி அமைச்சக ஊழியர்களின் 100 குழந்தைகள், எம்.பி.க்கள், ஓய்வுபெற்ற கேந்திரிய வித்யாலயா ஊழியர்கள் ஆகியோரின் குழந்தைகள் மற்றும் பேரப்பிள்ளைகள், பள்ளி நிர்வாக குழு தலைவரின் விருப்ப ஒதுக்கீடு ஆகிய ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விருது பெற்றவர்கள்

அதே சமயத்தில், பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர்சக்ரா, அசோக் சக்ரா, கீர்த்தி சக்ரா, ஷவுர்யா சக்ரா, தேசிய வீரதீர விருது ஆகியவற்றை பெற்றவர்களின் குழந்தைகள், ரா ஊழியர்களின் 15 குழந்தைகள், நுண்கலையில் சிறப்பு திறன்வாய்ந்த குழந்தைகள் ஆகியோருக்கான ஒதுக்கீடு தொடரும்.

மேலும், பணியின் காரணமாக வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களின் குழந்தைகளுக்கு மொத்தம் 60 இடங்கள் ஒதுக்கப்படும். அவர்கள் வெளிநாட்டில் படித்த பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் வாங்கி சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு ஒன்றுக்கு ஒரு பள்ளியில் 5 குழந்தைகளுக்கு மிகாமல் சேர்க்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.