May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதி வழங்க பிரதமருக்கு, முதல்-அமைச்சர் கடிதம்

1 min read

Letter from the First Minister to the Prime Minister to grant permission to transport essential items from Tamil Nadu to Sri Lanka

29.4.2022
தமிழகத்தில் இருந்து இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள், மருந்துகளை எடுத்துச்செல்ல அனுமதி வழங்க உத்தரவிடவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதம்

கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்க உரிய அனுமதி வழங்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழக அரசு உதவ தயார்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் துன்பத்துக்கும், துயரத்துக்கும் ஆளாகியுள்ளனர். ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு உருவாகி வரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காணப்படவேண்டும்.

இதுதொடர்பாக 31-3-2022 அன்று நான் ஏற்கனவே அளித்த கோரிக்கை மனுவின்மூலம் இந்த பிரச்சினையை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறேன். இலங்கையில் வாடும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்று அதில் குறிப்பிட்டிருந்தேன்.

மேலும் 15-4-2022 அன்று வெளியுறவுத்துறை மந்திரிக்கு நான் எழுதிய கடிதத்திலும், அவருடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போதும் இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியிருந்ததோடு, இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான பொருட்களையும், உதவிகளையும் வழங்குவதற்கு மத்திய அரசின் அனுமதியை கோரியிருந்தேன்.

ஆனால் இந்த கோரிக்கை குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் மத்திய அரசிடமிருந்து, தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கப்பெறவில்லை.

தீர்மானம்

இதற்கிடையில், இலங்கையில் நிலவும் அமைதியின்மை மற்றும் மக்கள் அனுபவித்து வரும் சொல்லொணாத் துயரங்கள் குறித்த செய்திகள் நாள்தோறும் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று அத்தியாவசிய பொருட்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் உடனடியாக இலங்கைக்கு அனுப்ப தேவையான ஏற்பாடுகளை செய்து உரிய அனுமதிகளை மத்திய அரசு வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு சட்டசபையில் இன்று (நேற்று) (29-4-2022) ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்த தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றுவதற்கு முன்னர் நடைபெற்ற விவாதத்தின்போது, அவையில் இடம்பெற்றுள்ள அனைத்து சட்டமன்ற கட்சிகளும் இலங்கையில் நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் மேலும் தாமதிக்காமல் உரிய நேரத்தில் உதவிக்கரம் நீட்ட வேண்டியதன் அவசியம் குறித்து தங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தின.

அனுமதி வழங்க வேண்டும்

தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுகளை தான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். தமிழ்நாட்டில் இருந்து இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை விரைவாக எடுத்துச்செல்வதற்கு உரிய அனுமதிகளை வழங்குவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உடனடியாக வழங்கவேண்டும்.

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் பிரதமரின் மேலான கவனத்துக்கு இந்த கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.