இலங்கை பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா ஆதரவளிக்கும்- வெளியுறவுத்துறை தகவல்
1 min read
India will support Sri Lanka’s economic recovery – Foreign Ministry Information
10.5.2022
இலங்கையின் பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா முழுமையாக ஆதரவளிக்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கலவரம்
இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் 130 பேர் காயமடைந்தனர்.
இதனையடுத்து மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும், போராட்டக்காரர்கள் மகிந்த ராஜபக்சே மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு தீவைத்தனர்.
இந்தியா உதவி
இலங்கையே போர்க்களமாக காட்சி அளித்துவரும் சூழலில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா தேவையான உதவிகளையும் செய்து வருகிறது. இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா முழுமையாக ஆதரவளித்து வருகிறது.
இந்திய அரசு அண்டை நாடுகளின் கொள்கைகளுக்கு ஏற்ப இலங்கையில் உள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க இலங்கை அரசுக்கு இந்தாண்டு மட்டும் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது. இதுதவிர, உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய பொருட்களையும் இலங்கையில் நிலவும் பற்றாக்குறையை தணிக்ககூடிய வகையில் இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கியுள்ளது.
ஜனநாயக முறைப்படி இலங்கை மக்களுடைய நலன்களில் இந்தியா எப்போதும் கவனம் செலுத்தும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.