‘நான் இறக்கவில்லை… சமாதியில் இருக்கிறேன்’- நித்யானந்தா பரபரப்பு தகவல்
1 min read
am not dead … I am in the tomb’ – Nithyananda sensational news
12.5.2022
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் நித்யானந்தா வீடியோக்கள் வெளியாகவில்லை. நித்யானந்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தான் அவர் வீடியோக்களை வெளியிடவில்லை என தகவல்கள் வெளியாகின.
‘நான் இறக்கவில்லை… சமாதியில் இருக்கிறேன்’- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யானந்தா
உடல் மெலிந்து காணப்படும் நித்யானந்தா
நித்யானந்தா
கடத்தல், பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் நித்யானந்தா வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார்.
அவர் ஆஸ்திரேலியா அருகே ஒரு குட்டி தீவை விலைக்கு வாங்கி அதனை கைலாசா நாடு என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அந்த நாட்டுக்கென்று தனி ரூபாய் நோட்டுகள், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை வெளியிட்டார்.
இதற்கிடையே சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து அவரை தேடும் பணியில் குஜராத் மற்றும் கர்நாடகா போலீசார் ஈடுபட்டனர்.
போலீஸ் தேடுதலுக்கு மத்தியில் நித்யானந்தா தினந்தோறும் சமூக வலைதளத்தில் தோன்றி தனது பக்தர்கள் மத்தியில் நேரடியாக சத்சங்க உரையாற்றுவது, கலந்துரையாடுவது போன்ற வீடியோக்கள் வெளியாகின.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அவரது வீடியோக்கள் வெளியாகவில்லை. நித்யானந்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தான் அவர் வீடியோக்களை வெளியிடவில்லை என தகவல்கள் வெளியாகின.
இதன் உச்சமாக ஒரு சில சமூக வலைதளங்களில் நித்யானந்தா மரணம் அடைந்துவிட்டதாக தகவல்கள் பரவியது.
இதனால் அவரது பக்தர்கள் நித்யானந்தாவுக்கு என்ன ஆனது? என அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் நித்யானந்தா தற்போது சமூக வலைதளத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டதோடு சில தகவல்களையும் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் நித்யானந்தா உடல் மெலிந்து காணப்படுகிறார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
என்னை பற்றி ஹேக்கர்கள் நான் இறந்து விட்டதாக பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம். நான் சமாதியில் இருக்கிறேன். ஆனால் இறக்கவில்லை என்று என் சீடர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். என்னால் பேசவோ அல்லது சத்சங்கங்களை வழங்குவதற்கோ சக்தி வருவதற்கு இன்னும் நேரம் எடுக்கும்.
27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். மருத்துவ சிகிச்சையில் இருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. மருத்துவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்கள் என்பதைவிட என் பக்தர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை போன்றவர்கள்.
பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
தினந்தோறும் நடைபெறும் நித்ய பூஜை மட்டும் இன்னும் நிற்கவில்லை. மற்றபடி, வேறு எந்த வேலையையும் நான் செய்வதில்லை. உணவு உண்ண முடியவில்லை. தூங்க முடியவில்லை.
எனக்கு அறிமுகமானவர்களை கூட அடையாளம் கண்டுகொள்வதில் சிரமப்படுகிறேன். நான் சாகவில்லை. சமாதி மனநிலையை அடைந்து இருக்கிறேன். விரைவிலேயே பரிபூரண நலம் பெற்று திரும்புவேன்.