இலங்கைக்காக அரிசி கொள்முதல் செய்வதற்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
1 min read
Court refuses to ban purchase of rice for Sri Lanka
12.5.2022
இலங்கைக்கு வழங்குவதற்கான அரிசி கொள்முதல் விவகாரத்தில் தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
இலங்கைக்கு உதவி
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் இலங்கைக்கு உதவுவதற்காக 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்யப்படும் என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்து இருந்தார்.
இந்த அரிசியை அதிக விலைக்கு வாங்குவதாக கூறி திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயசங்கர் என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு ஒரு கிலோ அரிசி 33 ரூபாய் 50 காசுகள் என்ற அடிப்படையில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசிக்கு ரூ. 134 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
இதே அரிசியை இந்திய உணவுக்கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யும் போது 20 ரூபாய் தான் வரும். மேலும், தமிழக அரசுக்கு 54 கோடி ரூபாய் மிச்சமாகும். இதுகுறித்து கேள்வி எழுப்பும்போது, வெளிநாட்டுக்கு அரிசி அனுப்பும் போது தரமான அரிசியை அனுப்பவேண்டும் என்றும், அரிசி கொள்முதல் செய்வது குறித்து தவறான தகவல் பரப்பிவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே அதிக விலைக்கு அரிசி கொள்முதல் செய்வது குறித்து விசாரிக்க வேண்டும். அரிசி கொள்முதல் செய்யப்படும் என்ற தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
மறுப்பு
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, அரிசி கொள்முதல், இந்திய உணவுக்கழகத்தின் அனுமதியோடு மேற்கொள்ளப்படுகிறது என்றும், அவசர காலத்தில் கொள்முதல் செய்யும் போது டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் கூறினார்.
அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, வழக்கின் விசாரணையை கோடை விடுமுறைக்கு பிறகு தள்ளிவைத்துள்ளது.