இந்தியாவில் புதிதாக 2,841 பேருக்கு கொரோனா; 9 பேர் பலி
1 min read
Corona for 2,841 newcomers in India; 9 people killed
13.5.2022
இந்தியாவில் புதிதாக 2,841 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 9 பேர் பலியானார்கள்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பில் இருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,841 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதேநேரம் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 3,295 பேர் அதன் பிடியில் இருந்து மீண்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் 1,032, கேரளாவில் 413, அரியானாவில் 354, மகாராஷ்டிராவில் 231, உத்தரபிரதேசத்தில் 204, கர்நாடகாவில் 157 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் நாட்டில் மொத்த பாதிப்பு 4 கோடியே 31 லட்சத்து 16 ஆயிரத்து 254 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 73 ஆயிரத்து 460 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்பால் பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் 54 ஆக இருந்தது. இது நேற்று 24 ஆக குறைந்த நிலையில், இன்று 9 ஆக சரிந்துள்ளது.
இதில் கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலின்படி 8 மரணங்கள் அடங்கும். இதுதவிர மகாராஷ்டிராவில் இன்று ஒருவர் இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,24,190 ஆக உயர்ந்தது.
நாடு முழுவதும் இதுவரை 190 கோடியே 99 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் இன்று 14,03,220 டோஸ்கள் அடங்கும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 84.29 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் இன்று 4,86,628 மாதிரிகள் அடங்கும்.