21 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ்; மு.க.ஸ்டாலின் வழங்கினார்
1 min read
Prizes and Certificates of Appreciation for 21 Outstanding Writers; Presented by MK Stalin
13/5/2022
21 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான தனி பணிக்குழு நிதி 50 லட்சம் ரூபாயில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகையினைக் கொண்டு ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிட கிறித்துவர்களின் சிறந்த 10 படைப்புகள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாதோர் ஒருவரின் சிறந்த படைப்பையும் சேர்த்து மொத்தம் 11 படைப்புகளைத் தேர்வு செய்து, அப்படைப்புகளுக்கு ரூ.50,000 பரிசுத்தொகையாகவும், பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் 2020-2021 ம் ஆண்டிற்கான சிறந்த படைப்புகளுக்காகத் தேர்வு செய்யப்பட்ட 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் தவணை தொகையாக தலா 25,000 ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்தியாவின் 75ம் ஆண்டு சுதந்திர அமுத பெரு விழாவை முன்னிட்டு, ஒன்றிய அரசின் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் சார்பில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 23.4.2022 முதல் 29.4.2022 வரை நடைபெற்ற 9வது தேசிய அளவிலான பழங்குடியினர் கைவினைப் பொருட்கள் விற்பனை விழாவில் தமிழக பழங்குடியினர் சார்பாக உதகை மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையத்தின் மூலம் 3 தோடர் இனத்தைச் சார்ந்த பழங்குடிப் பெண்கள் தெரிவு செய்யப்பட்டு விற்பனை முகவர்களாக அனுப்பிவைக்கப்பட்டனர்.
அவ்விழாவில் மொத்தம் 62 பழங்குடியினரின் கைவினைப் பொருட்களும் 200 விற்பனை அங்காடிகளும் நிறுவப்பட்டு இருந்தன.
இவ்விழாவில் உதகை மாவட்டத்தில் வாழும் பண்டைய பழங்குடியினரான தோடர் இன மக்களால் வெள்ளை நிற பருத்தி துணியில் கருப்பு மற்றும் சிவப்பு நிற கம்பளி நூல்களை கொண்டு கைகளால் நெய்யப்படும் பூத்தையல் தேசிய அளவில் முதலிடம் பெற்றது. இதற்கான பரிசு தொகையாக ரூ.5000மும் பழங்குடியினர் ஆய்வு யைமத்திற்கு கேடயமும் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டது.
தேசிய அளவிலான பழங்குடியினர் கைவினைப் பொருட்கள் விற்பனை விழாவில், தோடர் பழங்குடியினரின் பூத்தையல் தேசிய அளவில் முதல் பரிசு பெற்றதற்காக, இவ்விழாவில் கலந்து கொண்ட தோடர் பழங்குடியின பெண்களும், பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) முனைவர் ச.உதயகுமாரும் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.