இந்தியாவில் சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
1 min read
Increase in corona exposure again in some states in India
2.6.2022
இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது.
இன்றுமுன்தினம் தினசரி பாதிப்பு 2,745 ஆக இருந்தது. இந்நிலையில் புதிய பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 9-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 3,207 ஆக இருந்தது. அதன் பிறகு 3 வாரங்களாக ஒரு நாள் பாதிப்பு 3 ஆயிரத்திற்குள் இருந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 1,197 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு சுமார் 2 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டி உள்ளது.
மராட்டியம்
இதே போல மகாராஷ்டிராவில் நேற்று 1,081 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 24-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 1,124 ஆக இருந்தது. அதன் பிறகு 3 மாதங்களுக்கு பிறகு தற்போது தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டி உள்ளது.
குறிப்பாக மாநில தலைநகரான மும்பையில் நேற்று 739 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 117 நாட்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் அதிகம் ஆகும்.
மேலும், மும்பையில் தொற்று பாதிப்பு விகிதமும் 8.4 சதவீதத்தை தாண்டி அதிர்ச்சி அளித்துள்ளது.
டெல்லி
இதுதவிர டெல்லியில் 368, அரியானாவில் 187, கர்நாடகாவில் 178, உத்தர பிரதேசத்தில் 124, தமிழ்நாட்டில் 139 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 64 ஆயிரத்து 544 ஆக உயர்ந்தது.
குணம் அடைந்தவர்கள்
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2,584 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 20 ஆயிரத்து 394ஆக உயர்ந்துள்ளது.
தினசரி பாதிப்பு உயர்ந்ததால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 19,509 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றை விட 1,123 அதிகம் ஆகும்.
தினசரி பாதிப்பு அதிகரித்தாலும் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை.
அதே நேரம் கேரளாவில் விடுபட்ட 5 மரணங்கள் திருத்தி அமைக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,24,641 ஆக உயர்ந்தது.
தடுப்பூசி
நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 193 கோடியே 70 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 12,44,298 டோஸ்கள் அடங்கும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 85.13 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் இன்று 4,41,989 மாதிரிகள் அடங்கும்.