ரெங்கநாதரை தரிசிக்க 200 மாட்டு வண்டிகளில் வந்த பக்தர்கள்
1 min read
Devotees came in 200 cow carts to visit Renganatha
ரெங்கநாதரை தரிசிக்க 200 மாட்டு வண்டிகளில் வந்த பக்தர்கள்
11.6.2022
ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்க 200 மாட்டு வண்டிகளில் பக்தர்கள் வந்தனர்.
ஸ்ரீரங்கம்
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு உள்ளூர், வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். அதற்கேற்ப ஆண்டின் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடந்த வண்ணம் உள்ளது.
மாட்டு வண்டிகளில்..
இதற்கிடையே பழமை, பாரம்பரியத்தை போற்றும் வகையில் கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாட்டு வண்டிகளில் கட்டுச்சோறு கட்டிக் கொண்டு பயணம் செய்து தங்களது குலதெய்வமான ரெங்கநாதரை தரிசிக்க வருகிறார்கள். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் அதற்கான வரலாற்று நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டனர். அருகிலுள்ள தென்னந் தோப்புகளில் தங்கி, கொள்ளிடக்கரையில் முடி காணிக்கை கொடுத்து வம்சம் செழித்து, தொழில் பெருகி, விவசாயம் தழைக்க வழிபாடு நடத்துகிறார்கள்.
அந்த வகையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாத சாமியை தரிசனம் செய்ய திருச்சி மாவட்டம் காவல்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 1,500 பக்தர்கள் சுமார் 200 இரட்டை மாட்டு வண்டியில் நேற்றிரவு புறப்பட்டு இன்று காலை (சனிக்கிழமை) ஸ்ரீரங்கம் வந்து சேந்தனர். அவர்களது பயணம் அல்லித்துறை, சோமரசம்பேட்டை, புத்தூர் நால்ரோடு சிக்னல், தில்லைநகர், கரூர் பைபாஸ் மேம்பாலம், அண்ணா சிலை, காவிரி பாலம் வழியாக அம்மா மண்டபம் ரோடு, ராகவேந்திரா வளைவு, மேலூர் ரோடு வழியாக மணி தோப்பை சென்று அடைந்தது.
நேர்த்தி கடன்
நாளை (12-ந்தேதி) வட காவிரி என்று அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் மணிகாணிக்கை செலுத்தி பெருமாளுக்கு தங்களது நேர்த்திக் கடனை செலுத்திய பின்பு பெருமாளை தரிசிக்க உள்ளனர். நான்கு சக்கர வாகனங்கள் பெருகிவிட்ட இந்த காலத்தில் மாட்டு வண்டி பயணத்தை பொதுமக்களும், இன்றையை தலைமுறை குழந்தைகளும் ரோட்டோரங்களில் நின்று ஆச்சரியத்துடன் பார்த்தனர்.