July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் நாளை திறப்பு- ஒரு வாரத்துக்கு மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சி

1 min read

Schools open tomorrow after summer vacation- refresher training for students for a week

12.6.2022
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப்பின் நாளை பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. முதல் ஒருவாரத்திற்கு மாணவர்களுக்கு புத்துண்ர்வு பயிற்சி அளிககப்படுகிறது.

பள்ளிக்கூடம் திறப்பு

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து நாளை (திங்கட்கிழமை) முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டு வகுப்புகள், நாளை தொடங்க உள்ளது.
இதைத் தொடர்ந்து வருகிற 20-ந்தேதி பிளஸ்-2 வகுப்புகளும் 27-ந்தேதி பிளஸ்-1 வகுப்புகளும் தொடங்குகின்றன. இதற்காக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து பாட நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடங்கள் நாளை (திங்கட்கிழமை) தொடங்கியதும் இலவச பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகளை வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

புத்துணர்வு பயிற்சி

வகுப்புகள் தொடங்கப்பட்டு முதல் ஒரு வாரத்துக்கு பாடங்களை நடத்தாமல் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்துமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒரு வாரத்திற்கு பிறகு வழக்கமான பாடங்களை அட்டவணைப்படி நடத்தலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.
காலை எப்போது பள்ளிகளை தொடங்கலாம்? மாலை எப்போது பள்ளிகளை முடிக்கலாம்? என்பது தொடர்பாக அந்தந்த பள்ளிகளே முடிவெடுக்கலாம் என்று கூறப்பட்டு உள்ளது. ஆனாலும் காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை பள்ளிக்கூடங்களை நடத்த மாதிரி நேரத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி காலை 9.10 மணி முதல் 9.30 மணி வரை 20 நிமிடம் காலை வணக்கக் கூட்டம், 9.30 மணி முதல் 10.10 மணி வரை முதல் பாடவேளை, 10.10 மணி முதல் 10.50 மணி வரை இரண்டாம் பாடவேளை, 10.50 மணி முதல் 11.20 மணி வரை இடைவேளை விடப்படும்.
11 மணி முதல் 11.40 மணி வரை மூன்றாம் பாடவேளை, 11.40 முதல் 12.20 மணி வரை நான்காம் பாடவேளை, 12.20 மணி முதல் 1 மணி வரை மதிய உணவு இடைவேளை விடப்படும். மதியம் 1 மணி முதல் 1.20 மணி வரை பருவ இதழ், செய்தித்தாள், புத்தகங்கள் வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மதியம் 1.20 மணி முதல் 2 மணி வரை 5-ம் பாடவேளை, 2 மணி முதல் 2.40 மணி வரை 6-ம் பாடவேளை, 2.40 மணி முதல் 2.50 மணி வரை இடைவேளை, 2.50 மணி முதல் 3.30 மணி வரை 7-ம் பாடவேளை, மதியம் 3.30 மணி முதல் 4.10 மணி வரை 8-ம் பாடவேளை நடத்தப்படும்.

ஆசிரியர்கள் வருகை

பள்ளிகளின் அமைவிடம் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு பள்ளிக்கூட நேரங்களை தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம். உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகை புரிதல் வேண்டும்.
உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களின் வருகை, ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்திட வேண்டும். ஒவ்வொரு வகுப்பிற்கும் வாரத்திற்கு இரண்டு பாடவேளைகள் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டு உள்ளன. உடற்கல்வி ஆசிரியர்கள் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் அனைவரையும் இப்பாடவேளைகளில் விளையாட வைக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாளில் பள்ளி நேரம் முடிந்தவுடன் அனைத்து மாணவர்களுக்கும் கூட்டு உடற்பயிற்சி ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை, 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாண வர்களுக்கு தனித்தனியே கூட்டு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.
தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் முன்னிலையில் காலை வணக்கக் கூட்டம் நடைபெறுதல் வேண்டும். காலை வணக்கக் கூட்டத்தில் மாணவர்களை தவறாமல் கலந்து கொள்ள செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒருநாள் அனுபவப் பகிர்வு, நீதிபோதனை பாடவேளைக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பாடவேளைக்கு சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் பொறுப்பேற்று மாணவர்களின் மனநலன் சார்ந்து தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும். அதே நாளில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்திற்கு முன்பு அந்தந்த வகுப்புகளில் பெற்றோர் கூட்டம் நடத்தப்பெற வேண்டும். இக்கூட்டத்தில் ஆசிரியர், பெற்றோரிடம் அவர்தம் குழந்தைகளின் வருகை, கற்றல்நிலை, உடல்நலம், மனநலம், கல்வி இணைச் செயல்பாடுகள், கல்வி சாரா செயல்பாடுகள் என பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளையும் விவாதிப்பதுடன், ஒவ்வொரு நாளும் வீட்டில் மாணவரின் கற்றல் சார்ந்து பெற்றோர் செய்ய வேண்டிய பணிகளையும் எடுத்துக் கூற வேண்டும். மேலும், பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் குறித்தும், அதனை மேம்படுத்த பள்ளி மேலாண்மைக் குழு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேற்கண்ட தகவல்களுடன் பள்ளிக் கல்வித்துறை பள்ளிக்கூடங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.