அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் மீண்டும் போட்டி உறுதி
1 min read
Joe Biden confirms re-election in US presidential election
15.6.2022
2024-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
அமெரிக்காவில் வருகிற 2024-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடுவேன் என தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்த நிலையில் ஜோ பைடன் 2-வது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பட்சத்தில் அவரது வயது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும் என முன்னாள் ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதை சுட்டிக்காட்டி பிரபல அமெரிக்க ஊடகம் கட்டுரை ஒன்றை அண்மையில் வெளியிட்டது. இதனால் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், ஜோ பைடனின் வயது ஒரு சிக்கலை ஏற்படுத்தும் என்ற கூற்றுகளை திட்டவட்டமாக நிராகரித்துள்ள வெள்ள மாளிகை அவர் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதை உறுதிப்படுத்தி உள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், “2024-ல் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி திரும்பத் திரும்பக் கூறிவருகிறார். அதற்கு அர்த்தம் என்னவென்றால் அவருக்கு வயது ஒரு பிரச்சினை அல்ல. அமெரிக்க மக்களின் நலனுக்காக உழைப்பதும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதுமே அவரின் முன்னுரிமை” என கூறினார்.