பஞ்சாயத்து தலைவரை சேற்றில் புரட்டி எடுத்த முன்னாள் தலைவர்
1 min read
The former leader who took the panchayat leader by storm in the mud
18.6.2022
அரசு புறம்போக்கு நிலத்தில் உழுது பயிர் செய்தது தொடர்பாக எழுந்த பிரச்சனையில் ஊராட்சி மன்ற தலைவரை முன்னாள் தலைவர் தாக்கியுள்ளார்.
பஞ்சாயத்து தலைவர்
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம்,வெங்கல் அருகே உள்ள அத்தங்கிகாவனூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருபவர் சாந்தி (வயது46). இவர் இந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பணிகள் மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆர்டர் பெற்றுக்கொண்டு வந்திருந்தார்.
இந்நிலையில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தங்கராஜ் மற்றும் அவரது உறவினர்கள் ஆர்டர் பெற்ற இடத்தில் உழுது பயிர் செய்துள்ளனர். அங்கு வந்த சாந்தி, அவரது மகன் கவியரசு ஆகியோர் தங்கராஜிடம் இந்த நிலத்தில் பயிர் செய்வது நியாயமா? இது அரசு புறம்போக்கு நிலம் என கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை,ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், போலீசார் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகக் கூறி ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில், பொதுமக்கள் ஏராளமானோர் வெங்கல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவிகா தலைமையில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் உள்ளிட்டோரை அழைத்து வந்து முறையாக விசாரணை மேற்கொள்வோம் என்று உறுதி கூறினர். இதன் பின்னர், அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இப்பிரச்சினையால்அப்பகுதியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.