அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை: தேனி மாவட்டமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு
1 min read
Single leadership in AIADMK: Theni district supports Edappadi Palanisamy
19.6.2022
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தேனி மாவட்டத்தைச்சேர்ந்த நிர்வாகிகளே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஜக்கையன் கூறினார்.
ஒற்றைத் தலைமை
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக 6வது நாளாக ஆலோசனை நீடிக்கிறது.
ஒற்றை தலைமை தேவை என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஒற்றை தலைமை தேவையில்லை என ஓ.பன்னீர்செல்வம் தனது கருத்தை கூறி உள்ளார். ஆனால், எடப்பாடி பழனிசாமி இதுபற்றி வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் அவரது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
எடப்பாடியுடன் சந்திப்பு
ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பல நிர்வாகிகள் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, எம்,சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், எம்.எல்.ஏ., ஜக்கையன் மற்றும் பல்வேறு நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிய சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்குப் பின் முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குதான். ஒற்றை தலைமை வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
கட்சிக்கு தலைமை தாங்குவது யார் என்ற கேள்வி எழுந்ததும், தலைமை கழகம், மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் ஏற்கனவே இதுபற்றி ஆலோசனை நடத்தி உள்ளனர். 23ம் தேதி அதற்கு உரிய தீர்வு ஏற்படும் வகையில் பொதுக்குழு கூட்டம் நடடக்கவிருக்கிறது. அந்த வகையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அவர் கட்சியை தலைமைதாங்கி வழிநடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். ஒற்றை தலைமை வேண்டும் என்பதை சொல்லியிருக்கிறோம்.
ஓபிஎஸ் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள், எடப்பாடியாரை ஏன் ஆதரிக்கிறோம் என்று கேட்கிறீர்கள். உள்கட்சி பிரச்சனைக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால் தற்போது தமிழ்நாடு முழுவதும் எடப்பாடியாருக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. மெஜாரிட்டி இருந்தால் அவருக்கு அந்த வாய்ப்பை வழங்குவது ஜனநாயக கடமை ஆகும். தலைமை பதவியை அவருக்கு கொடுத்தால் மிக நன்றாக இருக்கும். மூத்த தலைவர்கள் கூடி சமரச முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். ஒற்றை தலைமையாக எடப்பாடியாருக்கு வழங்குவதுடன், மற்றவர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்கும் முயற்சியும் நடக்கிறது.
ஒற்றை தலைமை என்று வந்தால் எடப்பாடி பழனிசாமி தேர்வாக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
இவ்வாறு முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் தெரிவித்தார்.
ஒற்றை தலைமை முடிவை ஓபிஎஸ் ஏற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றும், இளைஞரணி சார்பில் ஈபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் சிவபதி கூறினார்.