May 25, 2024

Seithi Saral

Tamil News Channel

“அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் படித்தாலும் நிச்சயம் முன்னேற முடியும்” -முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

1 min read

“Even if you study in the Tamil way in a government school, you can definitely make progress” – First Minister M.K. Stalin’s speech

27.6.2022
“அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் படித்தாலும் நிச்சயம் முன்னேற முடியும்” என்று ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் நடந்த ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கல்லூரி கனவு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

புத்துணர்ச்சி

இந்த இனிய காலை வேளையில், உங்களை எல்லாம் பார்க்கும்போது, எனக்கு உற்சாகமாக இருக்கிறது. கடந்த ஐந்தாறு நாட்களாக எனக்கு காய்ச்சல் ஏற்பட்டு, அதனால் உடல் சோர்வான நிலையில் இருந்த எனக்கு இந்த நிகழ்ச்சி அந்த சோர்வுகள் எல்லாம் நீங்கி, ஒரு புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் பெறக்கூடிய நிலையில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். கள்ளம் கபடம் இல்லாத உங்கள் முகங்களில் இருக்கும் இந்த இயல்பான அழகுதான் இனிமையான அனுபவத்தைத் தருகிறது.

சொந்தபிள்ளைகள்

இந்த மாநிலத்தின் முதலமைச்சராக மட்டும் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துவிடவில்லை. உங்களையெல்லாம் என்னுடைய சொந்தப் பிள்ளைகள் என்று கருதி அந்த உணர்வோடு உங்களை நான் வாழ்த்த வந்திருக்கிறேன். அரசு அதிகாரிகள்கூட இதனை ‘வழிகாட்டும் நிகழ்ச்சி’ என்று சொன்னார்கள். நம்மை விட, இந்தக் காலத்துப் பிள்ளைகள் மிக மிக விவரமானவர்கள். நான் சொல்வது உண்மைதானே… அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் தானே.
எனவே உங்களுக்கு எல்லாமே தெரியும். ஏனென்றால், எல்லோர் கையிலும் இப்போது மொபைல் போன் வந்துவிட்டது. இல்லை.. இல்லை…உலகமே உங்கள் விரல்நுனிக்கு இப்போது வந்துவிட்டது.

மேற்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பது பற்றியெல்லாம் நீங்கள் இணையத்தைப் பார்த்து அறிந்துகொள்ளக்கூடிய சூழ்நிலை இப்போது வந்திருக்கிறது. இருந்தாலும், உங்கள் மதிப்பெண் அடிப்படையில் எந்தப் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம், எதிர்கால வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன இதையெல்லாம் எடுத்துக் கூறி நாங்களும் உங்களுக்கு வழிகாட்டுவதற்கான வாய்ப்புதான்,
இந்த நிகழ்ச்சி. நாங்கள் ஏற்படுத்தியுள்ள இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை உங்களுக்கு உற்சாகம் ஊட்டக்கூடிய நிகழ்ச்சியாகவும்தான் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.

கடமை

நீங்கள் உங்கள் வாழ்க்கையில், பள்ளிக் கல்வி என்ற ஒரு படியைத் தாண்டி, கல்லூரிக் கல்வியில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். மாணவர்களாகிய நீங்கள்தான் இந்த மாநிலத்தின் அறிவுச் சொத்துக்கள். உங்களை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.
தமிழ்நாட்டு மக்களுக்கு நான் முதல்வராக இருக்கலாம். ஆனால் நீங்கள் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக விளங்க வேண்டும் என்ற பரந்த உள்ளத்தோடு, பரந்த எண்ணத்தோடு தொடங்கப்பட்ட திட்டம்தான், ‘நான் முதல்வன்’ என்கிற இந்தத் திட்டம். அதன் ஓர் அங்கமாகத்தான் இந்த ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பன்னிரண்டாம் வகுப்பை முடித்தோம் – கல்லூரியில் சேர்ந்தோம் – பட்டம் வாங்கினோம் – வேலையில் சேர்ந்தோம் -கைநிறைய சம்பளம் வாங்கினோம் என்பதோடு உங்கள் கடமை முடிந்துவிடுவது இல்லை.
எத்தகைய ஆற்றல் படைத்தவர்களாக நீங்கள் உயர்ந்தீர்கள், அத்தகைய ஆற்றலை வைத்து இந்தச் சமூகத்தை எப்படி மேம்படுத்த முயன்றீர்கள் என்பதுதான் முக்கியம். இதுதான், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் உண்மையான நோக்கம்.

பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றேன் – மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றேன் – மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றேன் – என்று பெயர் எடுப்பது மட்டுமல்ல கல்வித் திறனில் முதல்வன். அறிவாற்றலில் முதல்வன். படைப்புத் திறனில் முதல்வன். பன்முக ஆற்றலில் முதல்வன். ஒருவரை மதிக்கத் தெரிந்தவன். சமத்துவமாக நடக்கத் தெரிந்தவன். அனைவரும் பின்பற்றும் பண்பாட்டு அடையாளம் கொண்டவன். அனைவரையும் வழிநடத்தும் தலைமைத் திறன் பெற்றவன் என்று தமிழ்நாட்டு இளைஞர்களை, மாணவர்களை உயர்த்தும் திட்டம்தான் இந்த நான் முதல்வன் என்கிற திட்டம். அந்த இலக்கை அடையவே இந்தக் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை நாம் இங்கே நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அரசு பள்ளி

அரசுப் பள்ளியில் படித்து, பல துறைகளில் மிகச் சிறந்த ஆளுமைகளாக உருவாகியவர்கள் பெயரை, என்னால் இங்கு பட்டியலிட முடியும். அரசுப் பள்ளியில் படித்து, ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை விநியோகம் செய்தவர், இந்த நாட்டின் மிகச் சிறந்த குடியரசுத் தலைவர்களுள் ஒருவராக உருவானவர் தான் மிகச் சிறந்த விஞ்ஞானியாக இருந்த, ஏவுகணைத் தொழில்நுட்பம் முதல், பிரதமரின் அறிவியல் ஆலோசகர் உட்பட பலவற்றிலும் சிறப்பாகச் செயல்பட்டு, இறுதியாக மக்கள் குடியரசுத் தலைவர் என்று போற்றப்பட்ட, அப்துல் கலாம் அரசுப் பள்ளியில் படித்தவர்தான்.

சந்திராயன் புகழ் மயில்சாமி அண்ணாதுரை அரசுப் பள்ளியில் படித்தவர்; இஸ்ரோ தலைவராக இருந்த சிவன் அரசுப் பள்ளியில் படித்தவர். ஏன்! இந்த மேடையை அமர்ந்திருக்கக்கூடிய, வரவேற்புரை ஆற்றிய நம்முடைய தலைமைச் செயலாளர் அரசுப் பள்ளியில் படித்தவர். காவல்துறை தலைமை இயக்குநர் அரசுப் பள்ளியில் படித்தவர்தான்.

அரசுப் பள்ளியில், அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து, அவரவர் துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் படித்தாலும், நிச்சயம் முன்னேற முடியும் என்பதற்கு, நம் கண்முன்னாலேயே மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள் இருக்கிறார்கள்.

அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் நம்முடைய திராவிட இயக்கம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அதற்கான வாசற்படிதான் சமூகநீதி! அந்தச் சமூகநீதியை, இடஒதுக்கீட்டு உரிமையை சட்டமாக்கி வித்திட்டது.

இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மாநிலங்களில், தமிழ்நாட்டுக்கு இணையான கல்விக் கொள்கை எந்த மாநிலத்திலும் இல்லையென்றே சொல்லலாம்.
இதனை இன்னும் செம்மைப்படுத்தி, கல்வியில் சிறந்த தமிழ்நாடாக ஆக்குவதற்காகத் தீட்டப்பட்ட திட்டம்தான் ‘நான் முதல்வன் திட்டம்’. அந்தத் திட்டத்தின்படிதான் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பை முடித்திருக்கும் நீங்கள், அடுத்தக்கட்டத்துக்கு உயரப் போகிறீர்கள். பள்ளியில் இருந்து கல்லூரிக்கு உயரப் போகிறீர்கள்.
காலேஜ் ஸ்டூடன்ட் என்று கெத்தாக வலம் வரப் போகிறீர்கள்.
பள்ளிக்கூடங்களில் இருந்தளவுக்கு உங்களுக்கு கட்டுப்பாடுகள் இருக்காது என்று சொன்னாலும், கல்லூரிக் காலத்தில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகம் ஆகிவிடும். அதை மறந்துவிடக்கூடாது. எனவே, பள்ளிக் கல்விக் காலத்தை எப்படி பயன்படுத்தினீர்களோ, அதேபோல, நீங்கள் கல்லூரிக் காலத்திலும் கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

வேண்டுகோள்

தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களுக்கும், பெற்றோர்களுக்கும் என்னுடைய அன்பான ஒரு வேண்டுகோள். பொறியியல், மருத்துவம் என்பது மிகச் சிறந்த படிப்புகள்தான். ஆனால், அந்த இரண்டு கனவுகளோடு மட்டும் நின்றுவிட வேண்டாம். இன்று வாய்ப்புகள் எல்லாத் துறைகளிலும் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் படித்து முன்னேறி, உழைப்பைக் கொடுத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கின்றன.

ஆகவே, கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி, அந்தந்தத் துறையில் மிகச்சிறந்த வல்லுநர்கள் ஆவதற்கு, கல்வி நிறுவனங்கள் அளிக்கும் பாடப்பிரிவுகள் குறித்தான ஒரு வழிகாட்டி நிகழ்ச்சிதான் இது. பல திறன்கள், தனித்திறன்கள் கொண்டிருக்கக்கூடிய சமுதாயத்தை உருவாக்குவதே நம் நோக்கம்.

கல்லூரிக் கனவு நிகழ்ச்சிக்காக சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேனிலைப்பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்திருக்கக்கூடிய மாணவ, மாணவியர்கள் இங்கு வந்திருக்கிறீர்கள்.நேரு விளையாட்டு அரங்கமே உங்களால் மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. உங்களால் இந்த அரங்கமே அதிர்ந்து கொண்டு இருக்கிறது.

வெற்றிபெற்றவர்கள்

உலக அளவில் ஒவ்வொரு துறையிலும், வெற்றி பெற்றவர்களை உற்றுப் பாருங்கள். அவர்கள் அனைவருமே, தங்களுக்குப் பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுத்திருப்பவர்களாக, அந்தந்தத் துறையில், அளவுக்கதிகமாக கடுமையாக உழைத்திருப்பார்கள். பிடித்த துறையைத் தேர்ந்தெடுப்பதும், கடும் உழைப்புமே ஒவ்வொருவருடைய வெற்றிக்கு மிக மிக முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது. ஆகவே நீங்களும், உங்களுக்குப் பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுங்கள். அதில் அதிகமான உழைப்பைக் கொடுங்கள்! உங்களுடைய வெற்றி நிச்சயம்.

இங்கே, உங்களுக்கான அடுத்த கட்டத் திட்டங்கள் குறித்து இங்கே விளக்கிப் பேச இருக்கிறார்கள். இங்கே வல்லுநர்கள் ஒவ்வொருவராக வந்து உங்களுக்கு விளக்கக்கூடிய வகையில் தகவல்களை சொல்லப் போகிறார்கள். நான் மாணவக் கண்மணிகளை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன், அவர்கள் சொல்லக்கூடிய விளக்கங்களை, விவரங்களை, குறிப்புகளை நீங்கள் தயவு செய்து குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். இங்குப் பல்வேறு கல்வி நிறுவனங்களின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன, நான் கூட அதை பார்த்துவிட்டுத்தான் இந்த மேடைக்கு வந்தேன். அவற்றையும் நீங்கள் தெளிவாக, பொறுமையாக அதைப் பார்த்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும்..

இந்த ‘நான் முதல்வன் – கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சியானது, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1, 2 ஆகிய நாட்களில் நடக்கப் போகிறது.

தமிழகத்தில் ஏராளமான கல்வி நிலையங்கள் உள்ளன. இந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகளாக 100 கல்லூரிகளைத் தேர்வு செய்தால், அதில் 30 கல்லூரிகள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது என்று நான் இங்கு பெருமையோடு பதிவு செய்ய விரும்புகிறேன். எனவே கல்லூரிப் பட்டம் என்பதை எளிதாக அனைவரும் பெறுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஆனால், அந்தப் பட்டத்தைத் தாண்டிய தனித்திறமை இருந்தால்தான் நீங்கள் தனித்து ஜொலிக்க முடியும், பிரகாசிக்க முடியும். அதற்கு தன்னம்பிக்கை வேண்டும். நம்மால் முடியும் என்ற தைரியம் வேண்டும். நல்ல மொழியாற்றல் வேண்டும்.

தமிழ் மொழியாக இருக்கக்கூடிய நம்முடைய தாய்மொழியான தமிழிலும் உலக மொழியாக இருக்கக்கூடிய ஆங்கிலத்திலும் எழுத, பேச, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் அது பகுத்தறிவாக இருக்கவேண்டும் என்பது தான் மிக மிக முக்கியம், அதை மறந்துவிடக் கூடாது.

விரக்தி மனோபாவம் என்பது ஒருபோதும் இருக்கக்கூடாது. உங்களோடு மற்றவர்களை ஒப்பீடு செய்யாதீர்கள். இந்தப் பண்புநலன்கள் எல்லாம் ஒருவருக்கு நல்ல கல்வியால்தான் அமைந்திட முடியும். அத்தகைய கல்வியை, உயர்கல்வியைப் பெற வழிகாட்டியாக இருக்கப்போவதுதான், இந்தக் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி’.

“Knowledge is one’s power” – என்பார்கள். ஏதோ ஒன்றில் உங்களது அறிவு கூர்மை பெறுமானால், அந்த அறிவு உங்களது வாழ்க்கையை வளமானதாக ஆக்கும்.

கல்வியில், படிப்பில், விளையாட்டில், கலைத்திறன்களில் முதல்வர்களை உருவாக்குவதுதான் இந்த ‘நான் முதல்வன்’ திட்டத்தின் நோக்கம். நம்முடைய இளைஞர்களில் பல முதல்வர்களை உருவாக்கும் இந்தத் திட்டத்துக்கு, நான் தமிழக முதல்வராக வரவில்லை! உங்களில் ஒருவனாகத்தான் வந்திருக்கிறேன். அந்த நாற்காலியில் ஒவ்வொருவரையும், “நான் முதல்வன்” என்று கம்பீரமாக நீங்கள் சொல்லி, உங்களுடைய துறையில் முதல்வராக நீங்கள் வீற்றிருந்து, அந்த நாற்காலியை அலங்கரிக்கச் செய்வதுதான் என்னுடைய கடமை!

சாதி, மதம், பணம், அதிகாரம், வயது, அனுபவம், குடும்பம், பதவி, நாடுகள், வளர்ச்சி ஆகிய அனைத்தின் தன்மையும், ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம், நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஆனால் அறிவு மட்டும்தான் அனைத்தையும் கடந்து ஒரே அளவுகோலோடு அளவிடப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி வெறும் வழிகாட்டி நிகழ்ச்சி மட்டுமல்ல! கல்வி, விளையாட்டு, கலைத்திறன், தொழில்நுட்பம் என்று ஒவ்வொரு துறையிலும் தமிழக இளைஞர்களை வெற்றியாளர்களாக, செதுக்கிய நிகழ்ச்சிதான் இது.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.