மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா நியமனம்; பிரதமர் மோடி வாழ்த்து
1 min read
Nomination of Ilayaraja as Member of Rajya Sabha; Greetings Prime Minister Modi
6/7/2022
மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட இளையராஜாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இளையராஜா
விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார்.
மேலும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷா, ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் 4 பேரும் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக ஆகின்றனர்.
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜா, பி.டி.உஷாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஏழ்மையான பின்னணி…
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இளையராஜாவின் படைப்புகள் தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்துள்ளது. அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. அவரது வாழ்க்கைப் பயணம் சமமாக ஊக்கமளிக்கிறது. இளையராஜா ஏழ்மையான பின்னணியில் இருந்து உயர்ந்து இவ்வளவு சாதித்துள்ளார். அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பி.டி உஷா இந்தியர் அனைவருக்கும் ஒரு உத்வேகம். விளையாட்டில் அவரது சாதனைகள் பரவலாக அறியப்படுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக வளரும் விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டியாக அவர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. பி.டி. உஷா மாநிலங்களவை உறுப்பினருக்கு நியமனம் செய்யப்பட்டதற்கு அவருக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.