நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனை
1 min read
Contempt of Court case; Vijay Mallya sentenced to 4 months in jail
11.7.2022
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராத தொகை செலுத்தும்படி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.
விஜய்மல்லையா
பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி, அதனை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா பணப்பரிவர்த்தனையில் ஈடுபட கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அதனை மீறி 40 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான பரிவர்த்தனையை அவர் மேற்கொண்டார்.
இது தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த 2017ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அந்த தீா்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி மல்லையா தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அத்துடன் அவா் நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது வழக்குரைஞா் மூலமாகவோ ஆஜராக பலமுறை சுப்ரீம் கோர்ட்டு வாய்ப்பளித்தது. எனினும் அவா் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் மல்லையாவுக்கான தண்டனை விவரம் பற்றிய அறிவிப்பை கடந்த மார்ச் 10ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு பின்னர் அறிவிக்கப்படும் என ஒத்திவைத்தது. இந்நிலையில், அந்த வழக்கு 11ந்தேதிக்கு (இன்று) பட்டியலிடப்பட்டது. இதன்படி, இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமா்வு விஜய் மல்லையாவுக்கான தண்டனை விவரம் பற்றி அறிவித்துள்ளது. அதில், 40 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான பரிவர்த்தனையை தனது குடும்ப உறுப்பினர்களான வாரிசுகளுக்கு அவர் மேற்கொண்டார். நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்து, நீதிமன்ற அவமதிப்பு செய்ததற்கான குற்றத்திற்காக தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனையும் மற்றும் ரூ.2 ஆயிரம் அபராத தொகை செலுத்தும்படியும் உத்தரவிட்டு தீர்ப்பு அளித்து உள்ளனர். இதுதவிர, 4 வாரங்களுக்குள் 40 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தொகையை வட்டியுடன் அவர் திருப்பி செலுத்தும்படியும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதனை செய்ய தவறும் பட்சத்தில், அது அவரது சொத்துகள் முடக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும் தீர்ப்பில் தெரிவித்து உள்ளது.